/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு வழிபாடு
/
கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு வழிபாடு
ADDED : ஏப் 14, 2025 06:57 AM
ஈரோடு: கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாளாக புனித வெள்ளி உள்ளது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு கிறிஸ்தவர்கள், 40 நாள் தவக்காலத்தில் ஈடுபடுகின்றனர். மார்ச், 5ல் சாம்பல் புதனில் தவக்காலம் தொடங்கியது. 18ல் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு குருத்தோலை ஞாயிறு நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன.
இதை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் ஊர்வலம் சென்றனர். சி.எஸ்.ஐ., சர்ச் சார்பில் நடந்த குருத்தோலை ஊர்வலத்தில், திரளான கிறிஸ்தவர்கள் இசை வாத்தியங்கள் முழங்க வழிபாட்டு பாடல்களை பாடியபடி சென்றனர். மாநகரில் பல்வேறு சர்ச்சுகள் சார்பில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நடந்தது. பல சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறையொட்டி சமபந்தி விருந்தும் நடந்தது.
* அந்தியூரை அடுத்த நகலுார் புனித செபஸ்தியார் கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து குருத்தோலை ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஓசன்னா பாடலை பாடி சென்றனர். இதேபோல் அந்தியூர் சி.எஸ்.ஐ., ஆலயம் சார்பில் நடந்த குருத்தோலை ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.