/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மர்ம நபர் கல் வீசியதில் வகுப்பறை கண்ணாடி சேதம்
/
மர்ம நபர் கல் வீசியதில் வகுப்பறை கண்ணாடி சேதம்
ADDED : செப் 25, 2025 02:16 AM
ஈரோடு :ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கண்ணாடி, மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு, மாணிக்கம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நுாற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பயில்கின்றனர்.
இப்பள்ளி வகுப்பறை முன்புறம், பக்கவாட்டு பகுதியில் உள்ள கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்து சுக்குநுாறாக்கி உள்ளனர். இவ்வாறான செயல் இப்பள்ளியில் அடிக்கடி நடக்கிறது. ஆனால் இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. பள்ளி வகுப்பறை கண்ணாடிகள் உடைவது குறித்து பெற்றோர், ஆசிரியர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கசாமி கூறுகையில்,'' பள்ளி வகுப்பறை பக்கவாட்டு பகுதியில் உள்ள கண்ணாடியை மர்ம நபர்கள் உடைப்பதை தவிர்க்க, இரும்பு கம்பிகளை அமைத்து வருகிறோம். மர்ம நபர்கள் பள்ளியில் ஆள் நடமாட்டம் இல்லாத போது, கல்வீசி தாக்கி கண்ணாடியை உடைக்கின்றனர்.
பள்ளிக்கு சொந்த செலவில் வாட்ச்மேன் பணி அமர்த்தி உள்ளோம். குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அரசால் பள்ளிக்கு உதவியாளர்கள் யாவரும் நியமிக்கப்படவில்லை. மர்ம நபர்கள் வேண்டும் என்றே பள்ளியின் மீது கல்வீசி சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே கல்வி துறை அலுவலர்களுக்கு தெரிவித்துள்ளோம்,'' என்றார்.