/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒப்பந்ததாரர் எரித்து கொலை: பெண் போலீசில் சரண்
/
ஒப்பந்ததாரர் எரித்து கொலை: பெண் போலீசில் சரண்
ADDED : நவ 12, 2025 01:01 AM
அவிநாசி, திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகராட்சி, வள்ளுவர் வீதியை சேர்ந்தவர் சின்னப்பராஜ், 63. இவர் அவிநாசி வட்டார பகுதிகளில், மரங்களை ஒப்பந்த அடிப்படையில் வெட்டி, விற்பனை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சின்னேரிபாளையம் பகுதியிலுள்ள குட்டை அருகே எரித்து கொலை செய்யப்பட்டார். அவிநாசி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அவரை கொலை செய்ததாக, பூமணி, 42, என்ற பெண் அவிநாசி போலீசில் சரணடைந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நடுவச்சேரியில், கணவனை இழந்த பூமணி, 42, என்ற பெண்ணுடன் சின்னப்பராஜ் பழகி வந்தார். பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவரை பூமணி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு வலையபாளையம் ரோட்டில் குட்டைக்கு அருகில், பூமணியுடன் மது அருந்தினார். அப்போது இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பூமணி, பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் இறந்தார். பூமணி நேற்று அதிகாலை சரணடைந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.

