ADDED : ஜூன் 29, 2026 05:43 AM
புன்செய்புளியம்பட்டி:விளாமுண்டி
வனத்துறையினர் ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையில், பவானிசாகர் அணை
நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில், ரோந்து பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நான்கு பேர் மானை வேட்டையாடி, இறைச்சியை
அறுத்து கொண்டிருந்தனர். வனத்துறையினர் சுற்றி வளைத்துபிடிக்க
முயன்ற போது ஒருவர் பிடிபட்டார். மூவர் தப்பியோடி விட்டனர்.
பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், பவானிசாகரை சேர்ந்த
யுவராஜ், 29, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து, 40 கிலோ மான்
இறைச்சியை பறிமுதல் செய்தனர். கறியை விற்பனைக்கு கொண்டு செல்ல
முயன்றதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட யுவராஜை, சத்தி
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தப்பியோடிய பவானிசாகர் பகுதியை சேர்ந்த ராம்குமார், அருள்குமார்,
தினேஷை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
