/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீ.வ.வா., மூலம் புதிய வீடுகள் கட்டுவதில் தாமதம் 8,000 வீடுகள் விற்காமல் உள்ளன; அமைச்சர் தகவல்
/
வீ.வ.வா., மூலம் புதிய வீடுகள் கட்டுவதில் தாமதம் 8,000 வீடுகள் விற்காமல் உள்ளன; அமைச்சர் தகவல்
வீ.வ.வா., மூலம் புதிய வீடுகள் கட்டுவதில் தாமதம் 8,000 வீடுகள் விற்காமல் உள்ளன; அமைச்சர் தகவல்
வீ.வ.வா., மூலம் புதிய வீடுகள் கட்டுவதில் தாமதம் 8,000 வீடுகள் விற்காமல் உள்ளன; அமைச்சர் தகவல்
ADDED : ஜூலை 16, 2025 01:11 AM
ஈரோடு ''வீட்டு வசதி வாரிய வீடுகள் கட்டி முடித்து, 8,000 வீடுகள் விற்காமல் உள்ளதால், புதிய திட்டப்பணி
கள் தற்போதில்லை,'' என, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர்
முத்துசாமி தெரிவித்தார்.
'உங்களுடன் முதல்வர்' திட்ட முகாம் துவக்க விழாவில் பங்கேற்றவர், நிருபர்களிடம் இத்திட்டம் பற்றி விளக்கி, பிற கேள்விகளை தவிர்த்தார்.
அப்போது நிருபர்கள், ''ஈரோடு பெரியார் நகர், சம்பத் நகர் உட்பட பல இடங்களில் வீட்டு வசதித்துறைக்கு சொந்தமான வீடுகள் இடித்து அகற்றப்பட்டு புதிதாக வீடு கட்டப்படவில்லை. உடன் கட்டப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இன்னும், 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது விற்பனை நடப்பதுடன், 'ஜிபே' போன்ற பணமற்ற பரிவர்த்தனை முழு அளவில் துவங்கப்படாமல் முறைகேடு நடக்கிறது' என கேள்வி எழுப்பினர்.
அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: பிற கேள்விக்கு பதில் கூறினால், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செய்தி முக்கியத்துவம் குறைந்துவிடும். டாஸ்மாக் பற்றி கூறினால் அதுதான் தலைப்பு செய்தியாகிவிடும். எனவே அதுபற்றி மற்றொரு நாளில் விரிவாக பதில் கூறுகிறேன். இப்போ டாஸ்மாக் பிரச்னை வேண்டாம்.
வீட்டு வசதி வாரியத்தில் தேவையை அறியாமல் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட, 8,000க்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை விற்பனை செய்யப்படாமல் இருக்கின்றன. இச்சூழலில் ஈரோடு உட்பட எங்கும் புதிய திட்டப்பணிகள் தற்போதில்லை. அப்படி கட்டினாலும், அந்தந்த பகுதியின் தேவையை அறிந்து 'ஏ, பி, சி' என எந்த 'டைப்' வீடுகள் கட்ட வேண்டும், என்பதை அறிந்து அதன் பின் திட்டப்பணிகள் துவங்கும். அந்தந்த பகுதியின் தேவையை அறிவதற்கு கால தாமதம்
ஏற்படுகிறது.
இவ்வாறு கூறினார்.
'கவுன்சிலர் பேச்சை பெரிது படுத்த வேண்டாம்'
''ஈரோடு மாநகராட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., கவுன்சிலரே, 'நாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீதே இதுவரை நடவடிக்கை எடுப்பதில்லை. இதில், பொதுமக்கள் மனு மீது என்ன நடவடிக்கை எடுத்து
விடப்போகிறார்கள். அமைச்சர் கூறுவது மட்டுமே நடக்கிறது. எங்களை போன்ற கவுன்சிலர்கள் கூறுவது எதுவும் நடக்கவில்லை' என கூச்சலிட்டது பற்றி, அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் முத்துசாமி, ''அதை அப்படி எடுக்காதீர்கள். கவுன்சிலர்கள் போன்றோர்கள் சொல்வதைத்தான் நாங்கள் செயல்படுத்துகிறோம். செய்ய சொல்கிறோம். அவர்கள் சொல்லித்தான் அனைத்தும் நடக்கிறது. அப்படி கோபமாக பேசினால்தான் தனது வார்டில் பணிகள் விரைவாக நடக்கும் என்ற நோக்கில் அப்படி பேசி இருப்பார்.
முதல்வர் ஆய்வில் கூட நாங்களும், சில யோசனைகள், மக்களின் கோபங்களை எடுத்து கூறுவோம். அதற்காக முதல்வரை கோபமாக பேசினோம் என்றா அர்த்தம். அவ்வாறு எடுக்காமல், கோரிக்கைக்கு தீர்வை விரைவுபடுத்த அப்படி கூறி இருப்பார். அதை பெரிதாக்க வேண்டாம்,'' என்றார்.