ADDED : ஆக 26, 2026 07:00 AM
ஈரோடு: ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் மாணவியர், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் கலன்களின் மாதிரி ஸ்டால்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதை மாணவியர், ஆசிரியைகள் பார்வையிட்டனர். வீடு, வீட்டை ஒட்டிய பகுதிகளில் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்கும் வகையிலான பொருட்களை வைக்க கூடாது. வீடு, பள்ளி, நாம் வசிக்கும் பகுதி சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என, மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் அறிவுறுத்தினர். இப்பள்ளியில் சுகாதார அலுவலர் தங்கராஜ், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
