/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரி கரையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு கருங்கல்பாளையம், கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
/
காவிரி கரையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு கருங்கல்பாளையம், கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
காவிரி கரையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு கருங்கல்பாளையம், கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
காவிரி கரையில் களை கட்டிய ஆடி அமாவாசை வழிபாடு கருங்கல்பாளையம், கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜூலை 25, 2025 12:44 AM
தமிழ் மாதங்களில் ஆடி மாத அமாவாசை தினம், இறந்த முன்னோர்களை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. இதன்படி ஆடி அமாவாசை தினமான நேற்று, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்களால், காவிரி கரைப்பகுதிகள் களை கட்டின. ஈரோட்டில் கருங்கல்பாளையம், கூடுதுறை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த மக்கள், தர்ப்பணம் செய்தும், காவிரியில் புனித நீராடியும் வழிபட்டனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர். கரையோரத்தில் முன்னோர் ஆத்மா சாந்தியடைய, அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்க, காய்கறி படையலிட்டும், பிண்டம் வைத்தும், திதி, தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டனர். இதேபோல் பரிகாரம், தோஷ நிவர்த்தி பூஜைகளும் நடந்தன. காவிரி ஆற்றில் தற்போது வெள்ளம் ஓடுவதால், படிக்கட்டுகளுக்கு அருகில் சில நிமிடங்கள் மட்டுமே குளிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஒருசிலர் தர்ப்பணம் மட்டும் கொடுத்து சென்றனர். கடந்தாண்டை விட இந்தாண்டு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கூடுதுறையில்....
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, அதிகாலை முதலே மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டு, ஆற்றில் பிண்டம் கரைத்து வழிபட்டனர். பிறகு முக்கூடலில் நீராடி சங்கமேஸ்வரர், வேதநாயகியை தரிசித்து சென்றனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி அமாவாசையை ஒட்டி கோவில்களிலும், குல தெய்வ கோவில்களிலும், மக்கள் வழிபாடு அமோகமாக இருந்தது. இதன்படி பெருந்துறை சோழிஸ்வரர் திருக்கோவில், கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை ஆஞ்சநேயர் கோவில், காஞ்சிக்கோவில் சீதேவிஅம்மன் கோவில், தம்பிக்கலை ஐயன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சென்னிமலையில்...
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்ய, அதிகாலை, 5:௦௦ மணிக்கே கூட்டம் அலைமோதியது. அதிகாலை கோபூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, 6:40 மணி முதல் மாலை வரை அபிஷேகம் நடந்தபடி இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் பஸ் இரண்டும் இயக்கப்பட்டது.
பொது தரிசனத்தில் ஒரு மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது. சென்னிமலை அருகே வீரப்பம்பாளையத்தில் கிருஷ்ணதுளசி கோசாலையில் பித்ரு முக்தி விழா நடந்தது.
* டி.என்.பாளையம் அருகே அரக்கன் கோட்டை செம்மேட்டு கரையில் எட்டுக்கை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
* அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு காலை, 6:00 மணி முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதேபோல் அந்தியூர், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி சுற்று வட்டார பகுதி அம்மன் கோவில்களில், ஆடி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.
நிருபர் குழு