/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தை அமாவாசையை முன்னிட்டு கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
/
தை அமாவாசையை முன்னிட்டு கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
தை அமாவாசையை முன்னிட்டு கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஜன 30, 2025 01:52 AM
தை அமாவாசையை முன்னிட்டு கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
பவானி:தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று பவானி கூடுதுறையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி சென்றனர்.
தை மாதத்தில் வரும் நாளில், பவானி கூடுதுறையில் திதி, தர்ப்பணம், பிண்டம் வைத்து வழிபாடு நடத்துவதும், பரிகார பூஜைகள் செய்து, புனித நீராடி சுவாமிகளை வழிபடுவதும் வழக்கம். இந்நிலையில், தை அமாவாசையான நேற்று அதிகாலை முதலே, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தனர்.
நிரந்தர பரிகார மண்டபங்கள் மற்றும் தற்காலிக மண்டபங்களில், முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் கொடுத்து காவிரியில் எள்ளும் பிண்டமும் விட்டனர். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், பவானி டிஎஸ்பி., சந்திரசேகரன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோவில் நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமிகளை தரிசனம் செய்தனர்.
* தை அமாவாசையை முன்னிட்டு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், செல்லீஸ்வரர் கோவில், பேட்டை பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில், தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில், மலைக்கருப்புசாமி கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார், கரிவரதராஜ பெருமாள், சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், ஊத்துக்குழி அம்மன், தர்மசாஸ்தா ஐயப்பன் உள்ளிட்ட கோவில்களில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் மாரியம்மன் உற்சவர் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உலா நடந்தது. மேலும் பவானிசாகர், பவானி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட பரிகாரங்களை செய்தனர்.
*முன்னோர்களுக்கு திதி கொடுக்க, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையில், அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்தனர். காவிரி கரையில் குளித்து முடித்த பின், முன்னோர்களுக்கு திதி கொடுத்து காவிரியை வணங்கினர்.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நேற்று காலை முதல் பக்தர்கள் குவிந்தனர். அம்மன் சன்னதி எதிரேயுள்ள குண்டத்தில், பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் மொடச்சூர் தான்தோன்றியம்மன், சாரதா மாரியம்மன், பச்சைமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்ய, ஏராளமானோர் குவிந்தனர். குண்டத்தில் உப்பு, மிளகு, துாவி வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அன்னதானம் வழங்கினர்.போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
* டி.என்.பாளையம் அருகேயுள்ள, அரக்கன் கோட்டை செம்மேட்டுக்கரை பகுதியில் உள்ள, எட்டு கை அம்மனுக்கு நேற்று தை அமாவாசையை முன்னிட்டு, வழிபாட்டு குழு சார்பில் பால், தயிர், திருமஞ்சள், இளநீர், சந்தனம், மஞ்சள் பன்னீர் உள்ளிட்டவைகளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், எட்டு கை அம்மனுக்கு எலுமிச்சை மற்றும் பூக்களால் மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர். வந்திருந்தவர்களுக்கு
அன்னதானம் வழங்கப்பட்டது.