/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடி முதல் வெள்ளியில் களை கட்டிய அம்மன் கோவில்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
ஆடி முதல் வெள்ளியில் களை கட்டிய அம்மன் கோவில்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஆடி முதல் வெள்ளியில் களை கட்டிய அம்மன் கோவில்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ஆடி முதல் வெள்ளியில் களை கட்டிய அம்மன் கோவில்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
ADDED : ஜூலை 19, 2025 01:20 AM
ஈரோடு, ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் இம்மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழழைகளிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதன்படி ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், சிறப்பு வழிபாடு களை கட்டியது.
தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்து, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே வந்த பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, அம்மனை வணங்கினர். பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களான நடு மாரியம்மனுக்கு துர்கை அலங்காரம், காரைவாய்க்கால் மாரியம்மனுக்கு வெள்ளி காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
கொங்காலம்மன் கோவில் அம்மனுக்கு ராஜமாதங்கி அலங்காரம், சத்தி ரோடு எல்லை மாரியம்மன் மஹா மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. சின்னவலசு மஹா மாரியம்மனுக்கு, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுக்களில் அலங்காரம் செய்யப்பட்டது.
* பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை அலங்காரம் செய்யப்பட்டது. பவானி புது பஸ் ஸ்டாண்ட் காமாட்சியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதி அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். உச்சிகால பூஜையின் போது, 60 அடி குண்டம் முதல் ராஜகோபுரத்தை கடந்து, பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர். குண்டத்தில் பெண் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளி அம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் அபிஷேகம், ஆராதனைகளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது.
* சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, காலை முதலே பக்தர்கள் வரத் தொடங்கினர். குண்டத்தில் உப்பு, மிளகு துாவியும், தீபமேற்றியும் அம்மனை வழிபட்டனர்.