/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தென்னை கருப்பட்டி விலை தொடர் வீழ்ச்சி
/
தென்னை கருப்பட்டி விலை தொடர் வீழ்ச்சி
ADDED : செப் 06, 2011 01:43 AM
கோபிசெட்டிபாளையம் :தென்னை கருப்பட்டி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்
உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கோபி பகுதி சுற்று வட்டாரத்தில்
எல்.பி.பி., தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய கால்வாய்கள் மூலம், போதுமான
பாசன வசதி உள்ளதால் தென்னை மரங்களும், மானாவாரி நிலப்பகுதிகளில் பனை
மரங்களும் அதிகளவில் காணப்படுகிறது. தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து
இறக்கப்படும் பதநீர், கருப்பட்டியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
உற்பத்தியாளர்கள் சிறுவலூர் மற்றும் குன்னத்தூர் கூட்டுறவு கருப்பட்டி
உற்பத்தியாளர் சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். சென்ற வாரம் தென்னை
கருப்பட்டி 10 கிலோ 319 ரூபாய்க்கு விற்பனையானது. நடப்பு வாரம் தென்னை
கருப்பட்டி 10 கிலோவுக்கு 12 ரூபாய் வீழ்ச்சி அடைந்து 307 ரூபாய்க்கு
விற்பனை செய்யப்பட்டது. சங்கத்துக்கு, 15 ஆயிரம் கிலோ கருப்பட்டி
வரத்தானது. 4.68 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சென்ற மாதம்
துவக்கத்தில் தென்னை கருப்பட்டி 395 முதல் 420 ரூபாய் வரை விற்கப்பட்டது.
கருப்பட்டி தேவை குறைந்து வருவதால் ஒரு மாதத்தில் 10 கிலோவுக்கு 100 ரூபாய்
வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. கருப்பட்டி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைவதால்
உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். கருப்பட்டி உற்பத்தியாளர்கள்
கூறியதாவது: தென்னை மரங்களில் மட்டுமே பதநீர் இறக்கப்பட்டு கருப்பட்டி
உற்பத்தி செய்யப்படுகிறது. சென்ற மாதத்தில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள்
காரணமாக கருப்பட்டி விற்பனை சூடுபிடித்துள்ளது.விநாயகர் சதுர்த்தி பண்டிகை
முடிந்துள்ளதால் கருப்பட்டி தேவை குறைந்து விட்டது. இதனால், விலை சரிவு
கண்டு வருகிறது. நடப்பு வாரத்தில் 10 கிலோவுக்கு 12 ரூபாய் வரையும், சென்ற
ஒரு மாதத்தில் 100 ரூபாய் வரையும் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு
அவர்கள் கூறினர்.

