UPDATED : நவ 09, 2026 07:23 AM
ADDED : நவ 09, 2026 05:47 AM

ஈரோடு:தீபாவளி பண்டிகையை ஒட்டி ஈரோடு மாநகர கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையை தொடர்ந்து கமலாம்பிகை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
காவிரிக்கரை சோழீஸ்வரர் கோவிலில் சோழீஸ்வரர் சுவாமி மலர் அலங்காரத்திலும், சுந்தராம்பிகை பச்சரிசி மாவு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். இதேபோல் பெரிய மாரிம்மன் கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கஸ்துாரி அரங்கநாதர் கோவில், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் உட்பட மாநகரில் பெரும்பாலான கோவில்களில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பலர் பரிகாரம், தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்தனர்.
சென்னிமலையில்...
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகை என்பதால், அதிகாலை முதலே குடும்பம் குடும்பமாக பக்தர்கள், நேற்று வரத்தொடங்கினர்.
இதனால் தரிசன வரிசைகளில் கடும் நெரிசல் நிலவியது. பொது தரிசனத்துக்கு ஒரு மணி நேரமும், சிறப்பு தரிசனத்துக்கு அரை மணி நேரமும் பக்தர்கள் காத்திருக்க நேரிட்டது. வழக்கம்போல் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
-பண்ணாரி கோவிலில்...
ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று, சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். தீக்குண்டத்தில் மிளகு, உப்பு துாவியும், தீபமேற்றியும் வழிபட்டனர்.
பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். சத்தியமங்கலம், பவானிசாகர், புளியம்பட்டி, கோபி, நம்பியூர், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

