விவசாயிகளுக்கு தி.மு.க., எப்போதும் துணை நிற்கும்: வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் உறுதி
விவசாயிகளுக்கு தி.மு.க., எப்போதும் துணை நிற்கும்: வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் உறுதி
ADDED : ஏப் 15, 2026 06:50 AM
பெருந்துறை : பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம், நேற்று நல்லாம்பட்டி டவுன் பஞ்சாயத்து, பாண்டியம்பாளையம், கொளத்துபாளையம் கிராம பஞ்சாயத்துகளில், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
நல்லாம்பட்டி பஞ்சாயத்து, ரைஸ் மில் காலனி, நல்லாம்பட்டி, நடுவலசு, தாசம்புதுார், மாசம்மாவூர், பாறைக்காட்டுவலசு, சிட்டாம்பாளையம், பாண்டியம்பாளையம் கிராம பஞ்சாயத்து, கொளத்துபாளையம், பனங்காட்டு காலனி, குஞ்சரமடை, பிரப் நகர், ஆயப்பரப்பு, கொளத்து பாளையம் கிராம பஞ்சாயத்து, வெள்ளியங்காடு, புலவர்பாளையம், திட்டகாடு பகுதிகளில் மக்களிடம் வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
விவசாயிகளுக்கு தி.மு.க., எப்போதும் துணை நிற்கும், கீழ்பவானி வாய்க்காலில், கான்கிரீட் அமைக்க வேண்டும் என பழனிசாமி தலைமையிலான அரசு திட்டமிட்டது. இந்த திட்டம் நிறைவேறியிருந்தால், கீழ்பவானி பாசன பகுதிகளில் கசிவுநீர் கிடைக்காமல் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இத்திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு, தி.மு.க., ஆதரவாக இருந்தது. கரும்பு, நெல்லுக்கு கொள்முதல் விலையை உயர்த்தியது தி.மு.க., அரசு. விவசாய மோட்டார்களுக்கு இனிமேல் மீட்டர் கிடையாது என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெருந்துறை தொகுதியில் பெரும்பாலான இடங்கள் வறண்ட பகுதிகள் என்பதால், அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற சட்ட சபையில், 16 முறை பேசியதால் தான் இத்திட்டத்தை நிறைவேற்ற முந்தைய அரசு ஒப்புதல் அளித்தது. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வரும்போது அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள், 25 சதவீதம் நிறைவடையாமல் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று கூடுதலாக, ரூ.500 கோடியை பெற்றுத் தந்து, இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிட முழு முயற்சி செய்தேன்.
விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தேவையான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு பேசினார். இவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
