/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெயில் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து விலை உயர்வு
/
வெயில் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து விலை உயர்வு
வெயில் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து விலை உயர்வு
வெயில் அதிகரிப்பால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து விலை உயர்வு
ADDED : பிப் 16, 2024 01:38 AM
ஈரோடு:ஈரோடு, திருப்பூர், சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் பட்டுக்கூடு உற்பத்தி நடந்து வருகிறது. இவற்றை தர்மபுரி, சேலம் மற்றும் கர்நாடகா மாநிலம் ராம் நகரில் உள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
கடந்த மாதம் ஒரு கிலோ வெண்பட்டுக்கூடு, 400 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது வெயில் அதிகரிப்பால் உற்பத்தி குறைந்து, கிலோ, 500 முதல், 559 ரூபாய் வரை விற்பனையாகிறது.
இது குறித்து, தமிழ்நாடுபட்டு வளர்ச்சி விவசாயிகள் சங்க தலைவர் ராஜகோபால் கூறியதாவது:
கடந்த நவ., - டிச., மாதங்களில் ஓரளவு மழை இருந்ததுடன், குளிர் அதிகமாக இருந்ததால் பட்டு உற்பத்தி அதிகமாக இருந்தது. அதேநேரம் கடந்த டிசம்பரில், வெண் பட்டுக்கூடு விலை ஒரு கிலோ, 600 முதல், 650 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது. கடந்த ஜனவரியில் குளிர் நீடித்தாலும் ஒரு கிலோ, 400 ரூபாயாக விலை குறைந்தது.
ஜனவரி இறுதி முதல் இரவில் பனி இருந்தாலும், பகலில் அதிகமாக வெயில் வாட்டுவதால், பட்டுக்கூடு உற்பத்தி குறைந்துள்ளது. கடந்த இரு வாரமாக பட்டுக்கூடு விலை மீண்டும் உயரத்துவங்கி கடந்த, 13ல் கோலாரில் ஒரு கிலோ, 559 ரூபாய், தர்மபுரியில், 516 ரூபாய், ராம் நகரில், 542 ரூபாய்க்கு விற்பனையானது.
வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்பதால், பட்டுக்கூடு உற்பத்தி கடுமையாக குறையும். உற்பத்தி குறையும்போது விவசாயிகளின் வருவாய் குறையும். பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
எனவே, கோடையை தாங்கி வளரும் வகையில், சிறந்த பட்டுப்புழு ரகத்தை கண்டுபிடித்து வெளியிட வேண்டும். அப்போது தான், கோடை காலத்திலும் பட்டுக்கூடு உற்பத்தியை தடையின்றி வளர்க்க வாய்ப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.