/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊர்புற பறவைகள் கணக்கெடுப்பில் தமிழக அளவில் எலத்தூர் குளம் முதலிடம்
/
ஊர்புற பறவைகள் கணக்கெடுப்பில் தமிழக அளவில் எலத்தூர் குளம் முதலிடம்
ஊர்புற பறவைகள் கணக்கெடுப்பில் தமிழக அளவில் எலத்தூர் குளம் முதலிடம்
ஊர்புற பறவைகள் கணக்கெடுப்பில் தமிழக அளவில் எலத்தூர் குளம் முதலிடம்
ADDED : மார் 02, 2024 03:11 AM
நம்பியூர்: நம்பியூரில் உள்ள எலத்துார் குளம், நடப்பாண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில், தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஆண்டும் பிப்., மாதத்தில் நான்கு நாட்கள் நடக்கிறது. அமெரிக்காவில், ௧௯௯௮ல் தொடங்கிய இந்த கணக்கெடுப்பு, தற்போது உலகம் முழுவதும் இதே நாட்களில் நடக்கிறது. இந்தியாவில், 2013 முதல் நடக்கிறது.
இந்நிகழ்வில் உலகம் முழுவதும் பலர், தங்கள் பகுதி பறவைகளை ஆவணப்படுத்தி, மக்கள் அறிவியல் தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். நடப்பாண்டு கணக்கெடுப்பு கடந்த மாதம், 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடந்தது.
இதன்படி நடந்த கணக்கெடுப்பில், நம்பியூர் அருகே எலத்துார் பெரியகுளத்தில், 11௯ ஊர்புற பறவை இனங்கள் வாழ்வது கண்டறியப்பட்டு, உள்ளூர் மக்கள் மற்றும் பறவை ஆர்வலர்களால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதிக பறவை இனங்கள் மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில், 26வது இடத்தையும் பெற்றுள்ளது.
எலத்துார் பெரியகுளத்தில் இதுவரை, 168 வகை பறவை இனங்கள் வசிப்பதும், இதில், 49 இனங்களை வலசை வந்த வெளிநாட்டு பறவைகள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.
கருநாரை, மரநெட்டக் காலி, மஞ்சள் வயிறு கதிர்க்குருவி போன்ற அரிதான வலசை பறவைகள்; வரித்தலை வாத்து, வெண்புருவ வாத்து, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, கிளுவை போன்ற வலசை வரும் வாத்துகள்; விரால் அடிப்பான், வெண்தோல் கழுகு உள்ளிட்ட வலசை வரும் இரை கொல்லி பறவைகளும் இக்குளத்தை வாழ்விடமாக கொண்டுள்ளன.
அழிவின் விளிம்பில் உள்ள ஆற்று ஆலா, பெரிய புள்ளிக்கழுகு, வெண்கழுத்து நாரை, செந்தலை வல்லுாறு, மஞ்சள் மூக்கு நாரை, பாம்பு தாரா, வெள்ளை அன்றில் போன்ற உள்ளூர் பறவைகளும் காணப்
படுகின்றன.
இரவு நேரத்தில் இங்குள்ள மரங்களில், 3,000க்கும் மேற்பட்ட கொக்கு, நாரை, நீர்காகம், பாம்பு தாரா, காகம், புறா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் நீர்வாழ் பறவைகளும் தங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் அதிக பறவை உள்ளூர் மற்றும் வலசைப் பறவை இனங்களின் வாழ்விடமான எலத்துார் குளம் பல்லுயிர் செறிவுமிக்க இடமாகியுள்ளது.
எனவே எலத்துார் பெரிய குளத்தை பாதுகாக்கப்பட்ட ஈரநில பகுதியாக அறிவிக்க, அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவிப்பதன் மூலம், இங்குள்ள அரியவகை பறவை இனங்கள், குளத்தை ஆதாரமாக கொண்ட உள்ளூர் பறவை இனங்களும் பாதுகாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் பறவை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

