/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகைக்காக முதிய தம்பதி கொலை; உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
/
நகைக்காக முதிய தம்பதி கொலை; உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
நகைக்காக முதிய தம்பதி கொலை; உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
நகைக்காக முதிய தம்பதி கொலை; உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு கொங்கு மண்டலத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி
ADDED : மே 03, 2025 12:30 AM

ஈரோடு:கொங்கு மண்டலத்தில், தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயது முதிர்ந்த தம்பதியரை குறி வைத்து, கொடூரமாக கொலை செய்து, நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்வதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த வகையில், சிவகிரியில் தம்பதியை கொடூரமாக கொலை செய்து, 10.5 சவரன் நகை, 1.50 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி, 75. இவரது மனைவி பாக்கியம்மாள், 65. இருவரும் தோட்டத்தில் விவசாயம் பார்த்ததுடன், அங்கேயே வீடு கட்டி தனியாக வசித்தனர். தம்பதியின் மகன் கவிசங்கர், மகள் பானுமதி. இருவரும் திருமணமாகி திருப்பூர் மாவட்டம், முத்துாரில் வசிக்கின்றனர்.
இரண்டு நாட்களாக மகன், மகள் போனில் தொடர்பு கொண்டபோது, ராமசாமி, பாக்கியம்மாள் அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு பக்கத்து வீட்டில் வசிப்போர், தோட்டத்து வீட்டுக்கு சென்றபோது, வீட்டுக்கு வெளியே பாக்கியம்மாளும், வீட்டின் உள்ளே ராமசாமியும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மிகவும் அழுகிய நிலையில் இருந்த உடல்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஈரோடு எஸ்.பி., சுஜாதா, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
பாக்கியம்மாள் அணிந்திருந்த, 10.5 சவரன் நகை, பீரோவில் இருந்த, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் சில பொருட்கள் கொள்ளை போனதை உறுதி செய்தனர். இக்கொலை நடந்து நான்கு நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெருந்துறை அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது. தம்பதியின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., சுஜாதா உள்ளிட்ட போலீசார் பேச்சு நடத்திய பின், உடலை பெற்றுக் கொண்டனர்.
எஸ்.பி., சுஜாதா கூறியதாவது:
மேக்கரையான் தோட்டத்தில், முதிய தம்பதி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும், சம்பவ இடத்தில் விசாரணையை துவங்கி விட்டோம்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில், எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் சந்தேகப்படும் இடங்களை நோக்கி விசாரிக்கின்றனர். 'சிசிடிவி' பதிவுகளை தனியாக ஆய்வு செய்து வருகிறோம்.
எங்களுக்கு கிடைக்கும் ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிப்போம். பாக்கியம்மாள் அணிந்திருந்த, 10 சவரன் நகை திருட்டு போய் இருப்பது தெரிய வருகிறது. வீட்டில் இருந்த பணம் குறித்து சரியான தகவல் இல்லை.
இவ்வாறு இவ்வாறு கூறினார்.
'மாய உலகில் இருந்து
வெளியே வாங்க ஸ்டாலின்'
ராமசாமி - -பாக்கியம்மாள் தம்பதி படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறை மானிய கோரிக்கையின்போது, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசினார். இது தான் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல்,ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. இவற்றை, 'தனிப்பட்ட ஒன்று, இரண்டு விஷயங்கள்' என்று சொல்ல, தி.மு.க., அரசுக்கு வெட்கமாக இல்லையா? தமிழக மக்கள் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல், உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தி.மு.க., அரசு தள்ளியுள்ளது. இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் - ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முதல்வர் முறையாக செய்ய வேண்டும்.
- - பழனிசாமி,
அ.தி.மு.க., பொதுச்செயலர்
மெத்தனம் இல்லை
ஈரோட்டில் இரட்டை கொலை தகவல் கிடைத்ததும், போலீசார் நடவடிக்கையை துவங்கிவிட்டனர். மெத்தனமாக அரசு செயல்படுவதாக பழனிசாமி கூறுவது, அவரது வழக்கமான பேச்சு. அரசு தரப்பு மிக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. தனிப்படைகள் அமைத்து விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர். சில குற்றச்சம்பவங்களில், 8 மணி நேரத்தில் கூட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
- - முத்துசாமி, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர்
பாதுகாப்பை உறுதி செய்யுங்க
ஏற்கனவே நடந்த கொலை, கொள்ளையில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததே, தற்போதைய கொலைக்கு காரணம். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் முழங்கிய, அடுத்த இரு நாட்களில் நடந்துள்ள இரட்டைக்கொலை சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்குவதோடு, தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
- - தினகரன், அ.ம.மு.க., பொதுச்செயலர்
நம்பிக்கை சிதைந்து விடும்
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கில், இன்னும் எந்த தடயத்தையும் தி.மு.க., அரசு கண்டுபிடிக்கவில்லை. கொங்கு பகுதியில் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூர சம்பவங்கள், அச்சத்தில் உறைய வைப்பதோடு, தி.மு.க., ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை, எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளை குற்றங்களால், மக்களுக்கு சட்டம் - ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளது.
-- நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்
அரசின் கடமை
தமிழகத்தில் அண்மை காலமாகவே பணம், நகைக்காக வயது முதிர்ந்த இணையர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலைகளும்,அதற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்படாததும், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையை மாற்றி, மக்களிடம் நம்பிக்கையையும்,பாதுகாப்புஉணர்வையும் ஏற்படுத்த வேண்டியது,தமிழக அரசின் கடமை.
- அன்புமணி, பா.ம.க., தலைவர்

