/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டம்: சில வரி செய்திகள்!
/
ஈரோடு மாவட்டம்: சில வரி செய்திகள்!
ADDED : ஏப் 11, 2024 11:30 AM
தேர்தல் நடத்தை விதிமீறல் 103 புகார்கள் பதிவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை, 103 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, தீர்வு காணப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலுக்காக கலெக்டர் அலுவலகங்களில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கடந்த, 15 முதல் நேற்று முன்தினம் வரை, 24 மணி நேரமும் போன் அழைப்பு மற்றும் சி-விஜில் ஆப் மூலம் வரப்பெறும் புகார்களை பதிவு செய்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம், 60 புகாரும், சி-விஜில் ஆப் மூலம், 43 புகார் என, 103 புகார்கள் வரப்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனடியாக தொடர்புடைய துறை, பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தீர்வு காண்கின்றனர். தற்போது பதிவான, 103 புகார்களுக்கும் தீர்வு கண்டுள்ளனர்.
பெருந்துறையில் சமரச
விழிப்புணர்வு பேரணி
பெருந்துறை: பெருந்துறை துணை சமரச மையம் சார்பில், நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெருந்துறை சார்பு நீதிபதி கிருஷ்ணபிரியா தலைமை வகித்து, சமரச மையத்தின் பணிகள் பற்றி எடுத்துரைத்து, பேரணியை துவக்கி வைத்தார். நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி, பழைய பஸ் ஸ்டாண்ட், பவானி மெயின் ரோடு, ஈரோடு ரோடு வழியாக சென்று நீதிமன்றம் வளாகத்தில் நிறைவடைந்தது.
சமரச மைய வழக்கறிஞர்கள் பழனிசாமி, ரவி, சுப்பிரமணியம், சண்முகம், வெங்கடேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி சென்றனர். தனியார் பொறியியல் கல்லுாரி மாணவ மாணவிகள் 175 பேர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் 40 பேர், பெருந்துறை போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வு வாசகங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஈரோடு மாவட்டத்தில்
263 மதுபான பாட்டில் பறிமுதல்
ஈரோடு: அனுமதியின்றி விற்க வைத்திருந்த 263 மதுபான பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையிலான போலீசார், நேற்று சிவகிரி அம்மன் கோவில் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கூடுதல் விலைக்கு, 30 மதுபான பாட்டில்கள் வைத்திருந்த, அதே பகுதியை சேர்ந்த துரை மாணிக்கம், 36, என்பவரை கைது செய்தனர். இதே போல் மொடக்குறிச்சியில், நன்செய் ஊத்துக்குளியை சேர்ந்த ஞான சேகரன், 54, என்பவரிடம் இருந்து, 28 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து கைது செய்தனர். நேற்றுமுன் தினம் மாவட்டத்தில், கூடுதல் விலைக்கு விற்க வைத்திருந்த மூன்று கர்நாடகா மாநில மதுபாட்டில் உள்ளிட்ட, 205 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கிரிக்கெட்
அணிக்கு வீரர்கள் தேர்வு
ஈரோடு: ஈரோடு மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு வரும், 13ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் சங்கர ராமநாதன், செயலாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையே நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டியில், ஈரோடு மாவட்ட, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான போட்டி வரும், 13ம் தேதி காலை, 7:00 மணிக்கு பெருந்துறை சாலை செங்கோடம்பாளையம் சக்தி நகரில் உள்ள எஸ்.எஸ். அகாடமி பயிற்சி மையத்தில் நடக்கிறது.
தேர்வு போட்டியில், 1-.9.-2005ம் ஆண்டிற்கு பின்னர் பிறந்த ஆண்கள் பங்கேற்கலாம். விளையாட விருப்பம் உள்ள கிரிக்கெட் வீரர்கள், தங்கள் பிறப்பு சான்றுடன் வந்து கலந்து கொள்ளலாம். மேலும், வீரர்கள் வெள்ளை நிற சீருடை, விளையாட்டு உபகரணங்களுடன் வந்து பங்கேற்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 71 ஆயிரம் பறிமுதல்
பவானி: அம்மாபேட்டை அருகே, பட்லுார் நால்ரோட்டில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் குழுவினர், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக பவானியை சேர்ந்த முகமது அசார் என்பவர் ஓட்டி வந்த, பிக் அப் வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட, 71 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அலுவலர்கள், பவானி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகோபாலிடம் ஒப்படைத்தனர்.

