/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சமச்சீர் கல்வியில் ஈரோடு மக்கள் கருத்து என்ன?
/
சமச்சீர் கல்வியில் ஈரோடு மக்கள் கருத்து என்ன?
ADDED : ஆக 11, 2011 11:41 PM
ஈரோடு: சமர்ச்சீர் கல்வி அமலானதில் ஈரோடு மக்களிடையே வரவேற்பும், எதிர்ப்பும் நிலவுகிறது.
சமச்சீர்கல்வி அமல்படுத்தியது பற்றி ஈரோடு பொதுமக்கள் சிலர் கூறியதாவது: அனிஃபா, ஆட்டோ டிரைவர், வீரப்பன் சத்திரம்: சமச்சீர் கல்வி முறையை வரவேற்கிறோம்.
சமச்சீர் கல்வியில் பாடத்திட்டம், எதிர்காலத்துக்கு தக்கபடி இல்லை என, அரசு வக்கீல் கூறினார். நல்ல ஆசிரியர்களை கொண்டு, பாடத்திட்டத்தை பயனுள்ளதாக, மாற்றியமைத்திருக்கலாம். வரும் காலத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் படிப்பு பாதிக்காதவாறு, அரசியலை உள்ளே நுழையவிடாமல், கல்வியை பாதுகாக்க வேண்டும்.
ராஜன், டீ மாஸ்டர் (தெப்பகுளம் வீதி): படிப்பு என்பது ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இருக்கவே சமச்சீர் கல்வி உருவாக்கப்பட்டது. இரண்டு மாதம் கழித்து பாடப் புத்தகங்கள் கொடுத்துள்ளனர். ஒரு சில பள்ளிகளில் கூடுதல் பாடம் எனக்கூறி, மெட்ரிக் பாடத்தை நடத்திவருகின்றனர். மேலும், அதற்கான கூடுதல் கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். மேலும், சுதந்திர போராட்டகால தலைவர்கள் படங்களை மட்டும், புத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும். தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய படம், பாடங்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.
கிரிஜா, பழையபாளையம்: தனியார் பள்ளிகளில் 30 ஆயிரம் ரூபாய் வரையில் கட்டணம் செலுத்தி, சமச்சீர் கல்வியில் உள்ள ஐந்து புத்தகங்கள் மட்டும் படித்தால் போதுமா? சமச்சீர் என்றதும், அனைத்து பள்ளிகளும் சி.பி.எஸ்.சி., கல்வி முறைக்கு மாற்றப்பட்டு விட்டன. ஏற்கனவே, மெட்ரிக் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்தவர்கள்தான், அந்த பள்ளிகள் சி.பி.எஸ்.சி., முறைக்கு மாறிய பிறகும், பாடம் நடத்துகின்றனர். இவ்வாறு இருந்தால் மாணவர்களின் படிப்பு என்னவாகும்?
ரத்தினம், சூரம்பட்டி: சமச்சீர் கல்வி தேவையற்றது. மெட்ரிக் முறையில் யு.கே.ஜி.,யில் உள்ள பாடம்தான், தற்போது இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமாக வந்துள்ளது. மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி முந்தைய அரசு, பாடங்களை குறைத்து, மாணவர்களை மழுங்கச்செய்துள்ளது. 70 நாட்கள் புத்தகம் விநியோகிக்காமல், சில பள்ளிகளில் தேர்வுகள் கூட நடத்தியுள்ளனர். நடப்பாண்டு 10வது மற்றும் ப்ளஸ்2 பொதுத்தேர்வுகளில் 25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதே கடினம்.
ஜானகி, ஈரோடு: தமிழக அரசின் முடிவால், பெற்றோர் அதிகம் அலைந்துள்ளோம். சமச்சீர் கல்வி என்பதால், சி.பி.எஸ்.பி., பள்ளிகளுக்கு 'சீட்' கேட்டு நடையாக நடந்தோம். 'சீட்' கிடைக்கவில்லை, அதனால், அரசு பள்ளியில் குழந்தையை சேர்த்தோம். மெட்ரிக் பள்ளியில் படித்து விட்டு, தற்போது அரசு பள்ளிகளில், எப்படி படிக்க போகின்றனர் என்பது தெரியவில்லை. புத்தகம் தாமதாக கொடுத்ததால், விரைவாக பாடங்களை நடத்தி விடுவர். மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் சி.பி.எஸ்.சி., பள்ளிகளாக மாற்றப்பட்டதால், டியூஷன் எடுப்பவர்கள் காட்டில் மழைதான்.