/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து நெரிசல் தீர கலெக்டர், எஸ்.பி., ஆய்வு : இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்ற உத்தரவு
/
போக்குவரத்து நெரிசல் தீர கலெக்டர், எஸ்.பி., ஆய்வு : இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்ற உத்தரவு
போக்குவரத்து நெரிசல் தீர கலெக்டர், எஸ்.பி., ஆய்வு : இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்ற உத்தரவு
போக்குவரத்து நெரிசல் தீர கலெக்டர், எஸ்.பி., ஆய்வு : இடையூறாக உள்ள மின் கம்பங்கள் அகற்ற உத்தரவு
ADDED : ஆக 11, 2011 11:52 PM
ஈரோடு: ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து கலெக்டர் காமராஜ், எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள், மரங்களின் கிளைகளை அகற்ற உத்தரவிட்டனர். ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா, பிரப் ரோடு, ஈ.வி.என்., ரோடு, மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பெருந்துறை ரோடு ஆகியவற்றில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் இறப்பு அல்லது படுகாயமடையும் நிலை ஏற்படுகிறது. நெரிசல் காரணமாக வாகனங்கள் அப்பகுதியை விட்டு செல்ல நீண்ட நேரம் ஆகிறது. ஈரோடு நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் குறைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் காமராஜ், எஸ்.பி., ஜெயச்சந்திரன் ஆகியோர், நேற்று மாலை ரோடுகளில் நேரடியாக ஆய்வு செய்தனர்.
பன்னீர் செல்வம் பூங்காவில் ரோட்டோர மரக்கிளைகளை அப்புறப்படுத்தவும், பிரப் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை அகற்றவும் உத்தரவிட்டனர். பிரப் ரோடு செல்வ விநாயகர் கோவில், மும்முக விநாயகர் கோவில் அருகே மின் கம்பங்களை உயரமாக அமைக்கவும் ஆலோசனை வழங்கினர். ஈ.வி.என்., ரோட்டில் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ள மூன்று மின் கம்பங்களை, இடமாற்ற மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேட்டூர் ரோட்டில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர். மூன்று மாடி, நான்கு மாடி கட்டிட சுவர்கள் எல்லாம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் வரையில் மஞ்சள் பெயின்ட்டால் குறிக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்து கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். எஸ்.பி., 'இந்த ஆக்கிரமிப்பால் எஸ்.பி., கார் கூட செல்ல முடியாத நிலை உள்ளது' என்றார். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி, ஆர்.டி.ஓ., சுகுமாருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோட்டின் நடுவில் சாக்கடை கால்வாய்க்காக சுவர் கட்டப்பட்டு, இரும்பு கம்பியால் மூடி வைக்கப்பட்டிருந்த இடத்தில், பாலம் அமைக்க உத்தரவிட்டனர். மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்திரன், இன்ஜினியர் வடிவேலு, போக்குவரத்து டி.எஸ்.பி., ராஜூ, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரவீந்திரன், உதவி கோட்ட பொறியாளர் கங்காதரன், மின்வாரிய உதவி பொறியாளர் செல்வகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.