/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
/
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு மழை பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
ADDED : செப் 03, 2011 12:46 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை களைய தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் காமராஜ் பேசியதாவது: பருவமழையால் ஏற்படும் பிரச்னைகளை களைய, பல துறையினர் இணைந்து முக்கிய பங்காற்ற வேண்டும். குறிப்பாக, வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, தீயணைப்பு, நெடுஞ்சாலை, கால்நடை, போலீஸ் துறையினர் முக்கிய பங்காற்ற வேண்டும். தாழ்வான பகுதி எவை என்பதை முன்னதாகவே கண்டறிய வேண்டும். அங்குள்ள மக்களை அருகே உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கட்டிடம் பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளச் சேதத்தை தடுக்க முன்னதாகவே, தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால், உயிர் சேதத்தை தடுக்கலாம்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணை, குளம், குட்டை நிரம்பும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்னதாகவே திட்டமிட வேண்டும். மழை துவங்கும் முன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சிறப்பாக செய்தால், சேதத்தை தவிர்க்கலாம். தேவையான அளவு மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், கால்வாய் மற்றும் நீர் நிலைகளில் ஏற்படும் உடைப்பை சரி செய்ய முடியும்.
ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகத்தில் உள்ள மழைமானியை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். சாலைகளில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேவையான மராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவையான உணவுப்பொருள் இருப்பு வைக்க வேண்டும். சாக்கடை நீர் தேங்கிவிடாமல், உடனுக்குடன் அகற்ற வேண்டும். கொசு உற்பத்தியாகாமல் மருந்து தெளித்து தடுக்க வேண்டும். மக்களுக்கு நோய் பரவாமல் இருக்க தேவையான மருந்துகளை அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்க வேண்டும். மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவை எனில் தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும். மேல்நிலை குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.