/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்., யூனியனை கிராம மக்கள் முற்றுகை
/
பஞ்., யூனியனை கிராம மக்கள் முற்றுகை
ADDED : செப் 08, 2011 03:05 AM
காங்கேயம்: குடிநீர் கேட்டு மாரணம்பாளையம் கிராம மக்கள், காங்கேயம் யூனியன்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.காங்கேயம், பரஞ்சேர்வழி பஞ்சாயத்து,
மாரணம்பாளையம் கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள
ஆழ்குழாயில் வரும் தண்ணீர், அதிகம் உவர்ப்பு தன்மையுடன் உள்ளது.
இந்ததண்ணீரில் வேக வைக்கும் சாதம் மஞ்சளாக மாறிவிடுகிறது. இந்த தண்ணீரை
குடித்த கிராம மக்களுக்கு கை, கால் வலி, மூட்டு வலி, பற்களில் கறை, தலைமுடி
உதிர்வு, சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதை ஒட்டி அமைக்கப்பட்ட மேலும் இரு
ஆழ்குழாய்களின் தண்ணீரிலும் ரசாயன தாக்குதல் ஏற்பட்டது.தண்ணீரை ஆய்வு
செய்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், 'இந்த தண்ணீர் குடிநீருக்கு
உகந்ததல்ல' என, எழுதி வைத்தனர்.
இருப்பினும் மாற்று குடிநீர் திட்டத்துக்கு
பஞ்சாயத்து யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்த
செய்தி, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளியானது.தாசில்தார் குருநாதன் மற்றும்
பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகள் இந்த கிராமத்துக்கு சென்றனர். உடனடியாக
மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மோட்டார் ரூமில் இருந்த
ஃபியூஸ் கேரியரை எடுத்து சென்றனர். குடிநீர் வழங்குவதாக உறுதியளித்த
அதிகாரிகள், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆவேசமடைந்த கிராம மக்கள்
நேற்று மாலை காங்கேயம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
'பி.டி.ஓ.,க்கள் இருவரும் திருப்பூர் சென்றதால், நாளை காலை மாரணம்பாளையம்
வருவர்' என கூறிய பிற அதிகாரிகள், பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

