ADDED : செப் 19, 2011 01:20 AM
ஈரோடு: ஈரோடு காவிரி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை அமைத்து, மின்சாரம்
தயாரிக்க கட்டப்பட்ட பாலத்தின் மீது, பொதுமக்கள் நடந்தும், டூவீலர் மூலம்
செல்ல, தடை விதிக்கப்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.ஈரோடு - நாமக்கல் மாவட்டம் இடையே காவிரியாறு
செல்லுகிறது. தமிழக அரசு மின் பற்றாக்குறையை சமாளிக்க, கடந்த 2005ம் ஆண்டு
இறுதியில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில், 497 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே, தடுப்பணையை அமைத்து, 30 மெகாவாட்
மின் உற்பத்தி செய்வது என முடிவு செய்தது.இத்திட்டப்படி, ஈரோடு மாவட்டம்
வெண்டிபாளையத்திலும், நாமக்கல் மாவட்டம் பாசூரிலும், காவிரியின் குறுக்கே
புதிதாக, 18 கண்கள் பிரமாண்ட பாலம் கட்டப்பட்டது. இங்கு குரேஷியாவில்
இருந்து இறக்குமதி செய்த, பல்ப் தொழில் நுட்ப இயந்திரம் மூலம் மின்
உற்பத்தி செய்வற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. பாலம் பணிகள்
முடிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பாசூர் வழியாக
தடுப்பணையை கடந்து, சோழசிராமணி வழியாக ஈரோடு மாவட்டம் வந்து
சென்றனர்.இப்பாலம் கட்டும் முன், பாசூரில் இருந்து ஈரோடு மாவட்டம்
வரவேண்டியவர்கள் பள்ளிபாளையம், பரமத்தி வேலூர் சுற்றி வந்தனர்.
பரிசல்
மூலமாக, பாசூரில் இருந்து, சோழசிராமணிக்கு காவிரி ஆற்றை கடந்து, சென்று
வந்தனர். மின் உற்பத்திக்கு பாலம் கட்டினாலும், மறுபுறம் மக்களுக்கு பாலம்
பயன்பட்டதால் வரவேற்றனர். பாலம் வழியாக மக்கள் வந்து சென்றதால், ஏற்கனவே
இங்கிருந்து பரிசல் போக்குவரத்து ஜூலை மாதத்துடன்
நிறுத்தப்பட்டது.இந்நிலையில் மின்துறையினர், அதிரடியாக பாலத்தில்
கான்கிரீட் பணிகள் நடக்க உள்ளதால், மக்கள் நடந்து செல்லவும், டூவீலரில்
செல்ல காலவரையின்றி அனுமதி மறுக்கப்பட்டது. பாசூர் - சோழசிராமணி இடையேயான
தொடர்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது. பாலத்தை நம்பி, நிறுத்தப்பட்ட பரிசல்
போக்குவரத்தும், தற்போது இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பாசூர்,
சோழசிராமணி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கலெக்டர் நடவடிக்கை எடுத்து,
மீண்டும் பேரேஜ் பாலம் மீது, மக்கள் நடந்தும், டூவீலரில் செல்ல அனுமதிக்க
வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

