/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளி சுட்டுக்கொலை கோபியில் விவசாயி கைது
/
தொழிலாளி சுட்டுக்கொலை கோபியில் விவசாயி கைது
ADDED : டிச 01, 2024 02:01 AM
கோபி:ஈரோடு மாவட்டம், கோபி, நாகர்பாளையம் அருகே கீரிப்பள்ள தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்லால், 55; தோட்டத்து வீட்டில் வசிக்கும் இவர், வீட்டை சுற்றி சந்தன மரங்களும் வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு, வெளியில் சென்று பார்த்தார். அப்போது ஒருவர் நடமாடியது தெரியவே, துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.
'மரம் வெட்ட வந்திருந்தால் திரும்ப சென்று விடு' என்று, அவர் கூறிய நிலையில், கையில் அரிவாள் வைத்திருந்த ஆசாமி, அவரை வெட்ட வந்துள்ளார்.
இதனால் தற்காப்புக்காக அவரை இருமுறை சுட்டதில் அவர் இறந்து விட்டார். இது தெரிந்ததும் மோகன்லால் ஓடிவிட்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் தகவலின்படி கோபி போலீசார் அங்கு விரைந்தனர்.
விசாரணையில், துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானது, கோபி அருகே பெரிய மொடச்சூரை சேர்ந்த மூட்டை துாக்கும் தொழிலாளி கண்ணன், ௫௬, என்பது தெரிந்தது. கண்ணனின் உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர், மொடச்சூர் சந்தைக்கடை பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை, மறியலில் ஈடுபட்டனர்.
துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். மோகன்லாலை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

