/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
/
அந்தியூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ADDED : செப் 16, 2025 02:06 AM
அந்தியூர், அந்தியூர் தாலுகாவில் உள்ள, ஜீரோ வேல்யூ நிலங்களை, அயன் பட்டாவாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், அந்தியூர் தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தியூர் தாலுகாவில் எண்ணமங்கலம், சங்கராப்பாளையம், மைக்கேல்பாளையம், வெள்ளித்திருப்பூர், சென்னம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில், வனப்பகுதியை ஒட்டிய நிலங்கள், ஓராண்டுக்கு முன், 'ஜீரோ வேல்யூ'வாக மாற்றப்பட்டது. இதனால், 1,500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 'ஜீரோ வேல்யூ' மதிப்பில் உள்ள அனைத்து வகை நிலங்களையும், அயன் பட்டாவாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது சம்பந்தமாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன், தாலுகா அலுவலகத்தில் கூடிய விவசாயிகள் மனு அளித்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று, 1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஈரோடு கலெக்டரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தியூர் போலீசார் அனுமதி மறுத்தனர். விவசாயிகள், 20 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். இதை ஏற்க மறுத்த விவசாயிகள், கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை, செல்ல மாட்டோம் என, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.
இதையறிந்த அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம், கோபி சப் - கலெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைத்து விவசாயிகளும் இன்று (16ம் தேதி) கலெக்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த செல்ல உள்ளதால், போராட்டத்தை கைவிட்டனர்.