ADDED : செப் 02, 2026 06:30 AM
சத்தியமங்கலம்:தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள் எதிர்கொண்டு வரும் யானை தொல்லை, குடிநீர் மற்றும் பாசன நீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வை கேட்டு, விவசாயிகள் மற்றும் மக்கள் சார்பில், நேற்று ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
நடந்தது.
தாளவாடி பி.டி.ஓ., ஆபீசில் தொடங்கிய ஊர்வலம் மாரியம்மன் கோவில் வரை சென்றது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். கரும்பு அறுவடைக்கான வெட்டுக்கூலியை அரசு முறையாக நிர்ணயம் செய்ய வேண்டும். யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தவிர்க்க, கர்நாடக மாநிலத்தில் அமைத்துள்ள பழைய ரயில் தண்டவாளங்களை கொண்டு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் தாளவாடி வட்டாரத்தில், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக மாயாறு ஆற்று நீரை குழாய் மூலம் தாளவாடி மலை பகுதிக்கு கொண்டு வந்து, கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்ப வேண்டும்.
தலமலை முதல் தாளவாடி வரை, கெட்டவாடி முதல் தாளவாடி வரை ஆற்றின் குறுக்கே பல்வேறு இடங்களில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து விவசாயிகள், வனத்துறையினர், போலீசார், பி.டி.ஓ.,க்கள், வருவாய் துறையினர் முன்னிலையில், கோரிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம், தாளவாடி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
