ADDED : மார் 29, 2024 05:01 AM
மாநகர பகுதியில் இதுவரை
80 கோவில்களுக்கு அனுமதி
ஈரோடு: லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், ஈரோடு மாநகரில் உள்ள கோவில்களில், திருவிழா நடத்த, மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதி அமலான நாள் முதல் நேற்று முன்தினம் வரை, 80 கோவில்களில் விழா நடத்த, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது: தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால், கோவில் திருவிழா நடத்த கட்டாயம் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி பகுதி கோவில்களில் விழா நடத்த, மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இதுவரை பெரிய மாரியம்மன் உள்ளிட்ட, 80 கோவில்களில் விழா நடத்தவும், ஒலிபெருக்கி வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவில் விழா என்பதால், விண்ணப்பித்த அனைத்து மனுக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் திருமண மண்டபங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்த சில கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
தேர்தல் பறக்கும் படையால்
ரூ.2.33 கோடி பறிமுதல்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால், 2.33 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று காலை வரை, ஈரோடு கிழக்கு தொகுதியில், 63.77 லட்சம் ரூபாய், மேற்கு தொகுதியில், 57.22 லட்சம் ரூபாய், மொடக்குறிச்சி தொகுதியில், 6.92 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 19.39 லட்சம் ரூபாய், பவானியில், 16.37 லட்சம் ரூபாய், அந்தியூரில், 4.84 லட்சம் ரூபாய், கோபியில், 10.65 லட்சம் ரூபாய், பவானிசாகரில், 54.05 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
மாவட்ட அளவில், 8 தொகுதியிலும் சேர்த்து, 2 கோடியே, 33 லட்சத்து, 26,545 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்களை தாக்கல் செய்ததால், 1 கோடியே, 38 லட்சத்து, 42,095 ரூபாயை விடுவித்துள்ளனர். மீதி, 94 லட்சத்து, 84,450 ரூபாய், மாவட்ட கருவூலத்தில்
ஒப்படைத்துள்ளனர்.
நடத்தை விதி மீறியதாக
221 புகார்கள் பதிவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, 221 புகார்கள் பதிவாகியுள்ளன.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் புகார் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதியிலும், அரசு சுவரில் தேர்தல் விளம்பரம் எழுதியதாக, 25 வழக்கு, தனியார் சுவர்களில் தேர்தல் விளம்பரம் எழுதியதாக, 37 வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி போஸ்டர் ஒட்டியதாக, பேனர் வைத்ததாகவும் வழக்கு பதிவாகியுள்ளது.
அரசு சுவர், பொது இடங்களில் விதிமீறியதாக, 97 வழக்குகள், தனியார் இடத்தில் விதிமீறல் தொடர்பாக, 124 வழக்குகள் என, 221 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் அழைப்பிதழ்
கொடுத்து பிரசாரம்
டி.என்.பாளையம்:
திருப்பூர் லோக்சபா தொகுதி, அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில், ௧௦௦ சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, திருமண பத்திரிகை போல் அச்சிட்டு, தேர்தல் பத்திரிகையை மக்களுக்கு கொடுத்து வருவாய் துறையினர், நேற்று நுாதன பிரசாரம், விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
கள்ளிப்பட்டி காந்தி சிலையிலிருந்து கணக்கம்பாளையம் பிரிவு வரை கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயந்தன், வெங்கடாசலம், சரவணன் தலைமையில் பேரணியாக சென்று, மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கினர். இதில், 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

