ADDED : ஏப் 01, 2024 04:02 AM
ஈரோடு எம்.பி.,யின் வீட்டில்
முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
ஈரோடு: தேர்தல் பிரசாரத்துக்காக வந்த முதல்வர் ஸ்டாலின், தற்கொலை செய்து கொண்ட எம்.பி., கணேசமூர்த்தி வீட்டுக்கு சென்று, அவரது போட்டோவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஈரோடு ம.தி.மு.க., எம்.பி., கணேசமூர்த்தி கடந்த வாரம், விஷ மாத்திரை குடித்ததில் இறந்தார். சொந்த ஊரான அவல்பூந்துறை அருகே குமாரவலசில் உடல் தகனம் செய்யப்பட்டது.
தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலின், குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி பண்ணை வீட்டுக்கு நேற்று காலை சென்றார். கணேசமூர்த்தி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, அவரது மகன் கபிலன், மகள் தமிழ்பிரியா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ் உட்பட பலர் முதல்வருடன் சென்றனர்.
பறக்கும் படையால் இதுவரை
ரூ.2.60 கோடி பறிமுதல்
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதியில், ஈரோடு கிழக்கில் இதுவரை, 66.45 லட்சம் ரூபாய், ஈரோடு மேற்கில், 58.11 லட்சம் ரூபாய், மொடக்குறிச்சியில், 7.82 லட்சம் ரூபாய், பெருந்துறையில், 21.41 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.
பவானியில், 18.78 லட்சம் ரூபாய், அந்தியூரில், 4.85 லட்சம் ரூபாய், கோபியில், 20.66 லட்சம் ரூபாய், பவானிசாகரில், 62.87 லட்சம் ரூபாய் என, 8 தொகுதிகளிலும் சேர்த்து, 2 கோடியே, 60 லட்சத்து, 97,385 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து, 1 கோடியே, 71 லட்சத்து, 89,595 ரூபாயை உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மீதி, 89 லட்சத்து, 7,790 ரூபாயை மாவட்ட கருவூலத்தில் செலுத்தி உள்ளனர்.
நீலகிரி தொகுதியில்
16 பேர் போட்டி
புன்செய்புளியம்பட்டி: நீலகிரி லோக்சபா தொகுதியில், 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சின்னத்துடன் இவர்களின் விபரம்:
லோகேஷ்-தமிழ்ச்செல்வன்-- அ.தி.மு.க.,-இரட்டை இலை; ஆ.ராசா-- தி.மு.க.,-- உதய
சூரியன்; எல்.முருகன்--பா.ஜ.,--தாமரை; ஜெயக்குமார்- நாம் தமிழர் கட்சி-ஒலி வாங்கி; கணேச மூர்த்தி-பகுஜன் சமாஜ்--யானை; ஜெயந்தி-அம்பேத்கர் பார்ட்டி ஆப் இந்தியா- -கோட்டு; பத்திரன்-இந்திய கனசங்கம்--வெண்டைக்காய்; மலர் மன்னன்-சாமானிய மக்கள் நல கட்சி--மோதிரம்; அன்புகுரு-சுயேச்சை--படகோட்டியுடன் கூடிய பாய்மரக்கப்பல்; கிருஷ்ணகுமார்- -சுயேச்சை--மின்கம்பம்; சதீஸ்-சுயேச்சை--மடிக்கணினி; செல்வன்-சுயேச்சை--வைரம்; தனபால்- - சுயேச்சை--கிரிக்கெட் மட்டை; முருகன்-சுயேச்சை-
-காலிபிளவர்; முருகேசன்-சுயேச்சை--திராட்சை; விஜயகுமார்-சுயேச்சை--தலைக்கவசம்.
சி.பாளையம்-கொடிவேரி பிரிவில்
ஒரு வழி பயணத்தால் அபாயம்
கோபி, ஏப். 1-
கோபி அருகே சிங்கிரிபாளையம்-கொடிவேரி அணை பிரிவு வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை விரிவாக்கப்பணி நடக்கிறது. இதனால் இரண்டு கி.மீ., துாரத்துக்கு, சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மறுபகுதி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இதனால் சத்தியை நோக்கி பயணிக்கும் வாகனங்களும், கோபியை நோக்கி பயணிக்கும் வாகனங்களும், ஒரே சமயத்தில் ஒரே வழியில் பயணிக்கிறது.
இதனால் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் சாலைப்பணி நடப்பது குறித்து, கொடிவேரி அணை பிரிவில் மற்றும் சிங்கிரிபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், எந்த எச்சரிக்கையும் இல்லை. விபத்து நடக்கும் முன், எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.

