ADDED : மார் 10, 2024 03:43 AM
மாரியம்மன் கோவில் திருவிழா
12ல் பூச்சாட்டுதலுடன் துவக்கம்
ஈரோடு: கொளத்துபாளையம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும், 12ல் துவங்குகிறது.
ஊஞ்சலுார், கொளத்துபாளையம் மாரியம்மன் கோவில் அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இங்கு தேர் திருவிழா வரும், 12ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் துவங்குகிறது. 17ல் பூச்சொரிதல், கிராம சாந்தி நடக்கிறது. 18ல் கொடியேற்றம், 19 முதல் 26 வரை சுவாமி புறப்பாடு நடக்கிறது. 27ல் பூக்குண்டம், 28ல் தேர் திருவிழா, 29ல் மஞ்சள் நீராடல் நடக்கிறது. தனிபட்ட நபரிடம் உபயம், நன்கொடைகள் அளிக்க வேண்டாம். கோவில் அலுவலகத்தில் நன்கொடைகள், உபயம் அளித்து உரிய ரசீது பெற்ற செல்ல வேண்டும் என, பக்தர்களுக்கு கோவில் செயல் அலுவலர் உமாசெல்வி தெரிவித்துள்ளார்.
ரூ.65.19 லட்சத்துக்குசிவகிரியில் எள் விற்பனை
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 559 மூட்டை எள்ளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ கருப்பு ரக எள், 136.99 முதல், 174.99 ரூபாய் வரையிலும், சிவப்பு ரக எள் ஒரு கிலோ, 152 முதல், 162 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 41 ஆயிரத்து, 768 கிலோ எடை கொண்ட எள், 65 லட்சத்து, 19 ஆயிரத்து, 742 ரூபாய்க்கு விற்பனையானது.
தொழிலாளி மாயம்கோபி: கவுந்தப்பாடி அருகே ஐய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வரதராஜ், 48, கட்டட தொழிலாளி. இவர் கடந்த பிப்., 29ம் தேதி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி ஜானகி, 37, கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தேர்தல் பணிக்குழு தேர்வுஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சியின் செயலகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடந்தது. எதிர் வரும் லோக்சபா தேர்தலுக்காக, ஈரோடு லோக்சபா தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. தேர்தல் பணிக்குழு தலைவராக முகமது லுக்மானுல் ஹக்கீம், பணிக்குழு செயலாளர் திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சையது அபுதாஹிர், உறுப்பினர்களாக ஹசன்பாபு, பாஷா, ஜமால்தீன், பர்கான் அஹமது, முனாப், சாகுல் ஹமீது உட்பட பலர் நியமிக்கப்பட்டனர்.
துணை பதிவாளர் பொறுப்பேற்புஈரோடு: ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளராக காலிதா பானு நேற்று பொறுப்பேற்றார். இவர், குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி முடித்து, ஈரோட்டில் துணை பதிவாளராக பொறுப்பேற்றுள்ளார்.
நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்புபெருந்துறை: பெருந்துறை, குன்னத்துார் நால்ரோடு ஆட்டோ ஸ்டாண்டு சார்பாக, இலவச நீர் மோர், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், இலவச நீர் மோர், தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பாலகிருஷ்ணன், பெருந்துறை டவுன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சரஸ்வதி துரைராஜ், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் சித்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரூ.1.03 லட்சத்துக்குதேங்காய் விற்பனை
ஈரோடு: ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 10 ஆயிரத்து, 318 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 23.69 முதல், 28.50 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,816 கிலோ எடை கொண்ட தேங்காய், 1 லட்சத்து, 3,119 ரூபாய்க்கு விற்பனையானது.
தந்தையுடன் தகராறுமகன் விபரீத முடிவு
பெருந்துறை: பெருந்துறை, வெங்கமேட்டை சேர்ந்த முருகேசன் மகன் மவுலீஸ்வரன், 28. இவர், சிப்காட்டிலுள்ள கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர், தனது நண்பருக்கு வங்கியில் கடனாக ஒரு லட்சம் வாங்கி கொடுத்தார். ஆனால், நண்பர் திருப்பி தரவில்லை. இதனால் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகாரறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் இருவரிடையே தகாரறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மவுலீஸ்வரன், அருகிலுள்ள கோவில் கிணற்றில் குதித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்க முயன்றும், இரவு நேரமானதால் முடியவில்லை. நேற்று மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

