ADDED : மார் 15, 2024 04:05 AM
இலவச வீட்டு மனை
பட்டா வழங்கும் விழா
டி.என்.பாளையம்: அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.என் பாளையம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட கண்டிஷன் பட்டாவை மாற்றி, இ-பட்டாவாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 707 பட்டாக்களை ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார்.
பகவதி அம்மன் கோவிலில்குண்டம் விழா தொடக்கம்
டி.என்.பாளையம்: கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் விழா பூச்சாட்டுதல் நேற்று நடந்தது. முன்னதாக காலையில் கிராம சாந்தி நடந்தது. மதியம், 12:30 மணிக்கு பூச்சாட்டுதல் நடந்தது. வரும், 27ம் தேதி இரவு குண்டத்துக்கு தீ மூட்டப்படுகிறது. 28ம் தேதி அதிகாலை குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து அம்மனை வழிபடுவர்.
உடும்புக்கறியுடன்சிக்கிய வாலிபர்
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவரின் மருமகன் சடையப்பன், 37; இவர், குத்தியாலத்துார் பத்திரிகை படுகையை சேர்ந்தவர். உடும்பை வேட்டையாடிய சடையப்பன், மாமியார் வீட்டில் கறியை வைத்திருப்பதாக, டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் போனது. வனத்துறையினர் சோதனை செய்ததில், அரை கிலோ உடும்பு கறியை பறிமுதல் செய்தனர். வெள்ளக்கரடு வனப்பகுதியில் கண்ணி வைத்து பிடித்ததாக கூறினார். கண்ணி வலை, வெட்டுக்கத்தியை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.
ரூ.35 லட்சம் மதிப்பிலானநலத்திட்ட உதவி வழங்கல்
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, செய்தித்துறை சார்பில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் மகளிர் குழு உற்பத்தி பொருள் விற்பனை நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மேயர் நாகரத்தினம், டி.ஆர்.ஓ., வசந்தகுமார் முன்னிலை வகித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், மாற்றுத்திறனாளிகளை பராமரிப்போருக்கான உதவித்தொகைக்கான ஆணை, பிற பயனாளிகளுக்கு உதவி என, ௩௫ லட்சம் ரூபாயில் நலத்திட்ட உதவிகளை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். நிகழ்வில் துணை மேயர் செல்வராஜ், மண்டல தலைவர் பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பிரகாஷ், திருவாசகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மின்வாரிய ஓய்வூதியருக்கு20ம் தேதி குறைதீர் கூட்டம்
ஈரோடு: தமிழக மின் உற்பத்தி மற்றும் கழகத்தில், ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதிகளுக்கு உட்பட்ட அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர், பணியாளர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம் வரும், 20ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கும் கூட்டத்தில், மூன்று பேர் கொண்ட குழுவினர் மனு பெறுகின்றனர்.

