ADDED : டிச 02, 2025 02:51 AM
காங்கேயம் காங்கேயத்தில் திருப்பூர் ரோடு, அய்யாவுசெட்டியார் வீதியில், காமராஜர் நகரை சேர்ந்த செந்தில், 50; அயர்னிங் கடை வைத்துள்ளார்.
இதை ஒட்டி கார்த்திகை நகரை சேர்ந்த சின்னக்குட்டி, 65, சலுான் கடை நடத்தி வருகிறார். அயர்னிங் கடைக்கு நேற்று விடுமுறை என்பதால் துணி மூட்டைகளை கடைக்குள் வைத்திருந்தார்.
சலுான் கடை உரிமையாளர் சின்னக்குட்டி சொந்த வேலையாக வெளியே சென்றிருந்தார். மதியம், 12:00 மணியளவில் எதிர்பாராத விதமாக அயர்னிங் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
கடைக்குள் வைத்திருந்த துணி மூட்டைகளில் பரவி கொழுந்து விட்டு எரிந்த தீ, சலுான் கடைக்கும் பரவியது. அப்பகுதியினர் தகவலின்படி காங்கேயம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த துணி மற்றும் சலுான் கடையில் பொருட்கள் கருகி நாசமானது. விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

