ADDED : அக் 15, 2026 05:15 AM

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர்
அணை நீர் தேக்கத்தில், மீன் பிடிக்கும் குத்தகை உரிமம் தமிழ்நாடு மீன்
வளர்ச்சி கழகத்தின் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். 2 ஆண்டுகளுக்கு
முன்பு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில், மீன் பிடிக்கும்
குத்தகை உரிமத்தை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என
கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நீதிமன்ற வழிகாட்டுதலின்படி,
பவானிசாகர் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு,
மீன்பிடி உரிமம் வழங்கப்பட்டது.
கூட்டுறவு சங்கம் ஓராண்டிற்கு
மட்டுமே பணம் செலுத்திய நிலையில், மீண்டும் மீன் பிடிக்கும் பணியை மீன்
வளர்ச்சி கழகம் மேற்கொண்டது. மீன் வளர்ச்சி கழகம் சார்பில் பவானிசாகர்
அணையில், மீன் பிடிக்க குத்தகை உரிமம் டெண்டர் விடப்பட்டது.
இந்நிலையில், பவானிசாகர் மீன் வளர்ச்சி கழக அலுவலக வளாகத்தில்,
மீன்பிடி உரிமம் பெற்ற நிறுவனத்தின் மீன் பிடிக்கும் பணிக்கான தொடக்க
விழா நடந்தது. பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வி குத்து விளக்கு
ஏற்றி தொடங்கி வைத்தார். பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், மீன்
வளர்ச்சி கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
