/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்
/
2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம்
ADDED : மே 25, 2024 02:25 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில், 2 லட்சம் மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன், 6ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளிகள் மூலம், இலவசமாக சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
இதில், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தக காப்பு மையத்துக்கு வந்துள்ளன.
அதுபோல, நடுநிலை மற்றும் துவக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள், ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலை, மாநகராட்சி நடுநிலை பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வகுப்பு மாணவ, மாணவியருக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் முழுமையாக ஈரோடு வந்தடைந்த நிலையில் வரும், 27 முதல், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி துவங்குகிறது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பத்து கூறியதாவது: மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில், 1ம் வகுப்பில், 9,942 மாணவ, மாணவியர், 2ம் வகுப்பில், 10,649 பேர், 3ம் வகுப்பில், 12,206 பேர், 4ம் வகுப்பில், 12,927 பேர், 5ம் வகுப்பில், 13,731 பேர், 6 ம் வகுப்பில், 19,751 பேருக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது.
மேலும், 7 ம் வகுப்பில், 19,415 பேர், 8 ம் வகுப்பில், 19,183 பேர், 9ம் வகுப்பில், 18,709 பேர், 10ம் வகுப்பில், 25,338 பேர், பிளஸ் 1ல், 15,409 பேர், பிளஸ் 2 வில், 15,023 பேர் என, 1 லட்சத்து, 92,283 மாணவ, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.
வரும், 31க்குள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். பள்ளி திறக்கும் நாளில் வினியோகம் செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

