/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வட்டமலைகரை அணைக்குதண்ணீர் திறக்க அரசாணை
/
வட்டமலைகரை அணைக்குதண்ணீர் திறக்க அரசாணை
ADDED : ஜன 08, 2025 02:49 AM
வட்டமலைகரை அணைக்குதண்ணீர் திறக்க அரசாணை
வெள்ளகோவில், : .வெள்ளகோவில் அருகே வட்டமலை கரையில் அணை கட்டப்பட்டு, 1980ல் திறக்கப்பட்டது. அணை மூலம் வெள்ளகோவில், தாசநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், புதுப்பை உள்ளிட்ட பகுதிகளில், 6,௦௦௦ ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெற வாய்க்காலும் வெட்டப்பட்டுள்ளன. பி.ஏ.பி., பாசன கால்வாய் கசிவு நீர் மூலமும், பல்லடம், பொங்கலுார், அனுப்பட்டி பகுதிகளில் பெய்யும் மழை, அணையின் பிரதான நீர்வரத்தாக உள்ளது.
மேலும் பி.ஏ.பி., அணைகளில் உபரியாக நீர் இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும், தொடர்ந்து, 15 நாட்களுக்கு, 250 கன அடி வீதம் பல்லடம் அருகே உள்ள கள்ளிபாளையம் ஷட்டரில் இருந்து நீர் திறக்க அரசாணையும் உள்ளது. இதன்படி, 1995ம் ஆண்டுக்கு பிறகு ஒரு முறை கூட நீர் திறக்கப்படவில்லை. கடந்த, 2021ல் பி.ஏ.பி., கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு அணை நிரம்பியது. பின் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் சாமிநாதனிடம், வட்டமலை கரை ஓடை அணை நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், தண்ணீர் திறக்க வலியுறுத்தி மனு அளித்தனர். இதையேற்று வட்டமலை கரை அணைக்கு இன்று முதல், 10 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.