மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் முற்றுகையிடப்பட்ட அரசுப்பள்ளி
மாணவன் தாக்கப்பட்ட விவகாரம் முற்றுகையிடப்பட்ட அரசுப்பள்ளி
ADDED : செப் 26, 2026 06:47 AM

பவானி:ஆப்பக்கூடல்
அருகே உள்ள ஓசைப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மனைவி ரேவதி, 42; பவானி
போலீசில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய,
16 வயது மகன், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் -1
பயாலஜி பிரிவில் படிக்கிறார். இதே பிரிவில் படிக்கும் மற்றொரு
மாணவனுக்கும் எனது மகனுக்கும், நேற்று முன்தினம் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கழிவறைக்கு சென்ற என் மகன், அங்கு
மயங்கி கிடந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார்
மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். எனது
மகனை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகனுடைய
மருத்துவ செலவுக்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளார்.
முன்னதாக தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்,
உறவினர்கள், அரசுப்பள்ளியை நேற்று மதியம் முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிக்குமார், ஏ.டி.எஸ்.பி., தங்கவேல்
உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பள்ளி தரப்பில்
இருந்து, ஆசிரியர், முன்னாள் மாணவர் தரப்பில் சிகிச்சைக்காக, ஒரு லட்சம்
ரூபாய் வழங்கினர். இந்த தொகை போதாது என்றும், மாவட்ட நிர்வாகம் உதவி
செய்ய வேண்டும் என்றும், அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை
தொடர்ந்தே மாணவனின் தாயார், போலீசில் புகார் அளித்துள்ளார்.
இரு
மாணவர்களுக்கு இடையே எதனால் தகராறு ஏற்பட்டது, கழிவறையில்
மயங்கியதற்கான காரணம் என்ன என்பது, சிகிச்சை பெறும் மாணவன் குணமான
பிறகே தெரிய வரும் என்று பவானி போலீசார் தெரிவித்தனர்.
