ADDED : மே 23, 2024 06:55 AM
ஈரோடு : ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. அதிகபட்சமாக, 111.9 டிகிரி வெயில் பதிவானது. அனல் காற்று வீசியதால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர். அக்னி வெயில் தொடங்கிய சில நாட்களில், தமிழகத்தில் மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்திலும் அந்தியூர், தாளவாடி, சத்தியமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. கடந்த, 20-ம் தேதி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில், 87 மி.மீ., ஈரோட்டில் 24 மி.மீ., மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இரவு 7:15 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை, 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
* கோபியில் நேற்று மாலை முதல், வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. மாலை, 6:45 மணி முதல், இரவு 7:30 மணி வரை பலத்த மழை பெய்தது. அதன்பின், விட்டுவிட்டு மழை பெய்தபடி இருந்தது. கோபி பஸ் ஸ்டாண்டு சாலை, சத்தி சாலை, ஈரோடு சாலை, அத்தாணி சாலை வரை, மழை பெய்தபடி இருந்தது. இதனால், பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

