/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு பகுதியில் ஆய்வு
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு பகுதியில் ஆய்வு
ADDED : அக் 18, 2024 03:01 AM
வாய்க்கால் ஆக்கிரமிப்பு பகுதியில் ஆய்வு
பவானி, அக். 18-
மேட்டூர் வலதுகரை கால்வாய், கிளை கால்வாயான வர்ணபுரம் பாசன வாய்க்காலில் ஆக்கிரமிப்பாலும், நீர்வளத்துறை மற்றும் பவானி யூனியன் இணைந்து கட்டிய கழிவுநீர் கால்வாய் உயரமாக கட்டப்பட்டதாலும், கடைமடைக்கு தண்ணீர் செல்வதில்லை.
கலெக்டர் உத்தரவிட்டும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் மறியலில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இந்நிலையில் மாவட்ட துணை கலெக்டர் (பயிற்சி) சிவப்பிரகாஷ் தலைமையிலான அதிகாரிகள், வாய்க்கால் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர். 'கடைமடைக்கு தண்ணீர் வரும் வகையில், வாய்க்காலின் கிடைமட்ட உயரத்தை குறைக்க வேண்டும்' என்று, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 'நிதி ஒதுக்கீடு இல்லாததால் உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பி.டி.ஓ., வரதராஜ் தெரிவித்தார்.
'இதற்கு காலக்கெடு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். 'பாசன நிலங்கள் இல்லாத பகுதியில் வாய்க்கால் தண்ணீர் தேவையில்லை' என்றும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
* மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசனத்தில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி செல்லும் பகுதிகளில் ஆகாயத்தாமரை வளர்ந்து நீரோட்டதை தடுத்தது. அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி வாய்க்கால்பாளையம் முதல் மைலம்பாடி சிக்கநாயக்கனுார் ஏரி வரை, 7 கி.மீ., தொலைவுக்கு வாய்க்காலில், ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு, துாய்மை செய்யும் பணி நடந்தது.