/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கண்ணபுரம் மாட்டு சந்தையில் ரூ.10 கோடிக்கு விற்பனை
/
கண்ணபுரம் மாட்டு சந்தையில் ரூ.10 கோடிக்கு விற்பனை
ADDED : ஏப் 21, 2024 07:16 AM
காங்கேயம் : காங்கேயம், ஓலப்பாளையம் அருகே கண்ணபுரத்தில், ௧,௦௦௦ ஆண்டுகள் பழமையான விக்ரம சோழீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு சித்திரை தேர்த்திருவிழா, மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 9ம் தேதி பிரசித்தி பெற்ற கண்ணபுரம் மாட்டுச்சந்தையும் கூடியது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில விவசாயிகளும் மாடுகளை விற்கவும், வாங்கவும் வந்தனர்.
சந்தைக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களிலிருந்து, 5,000க்கும் மேற்பட்ட காங்கேயம் இன காளை, பசு, கன்று, எருது, பூச்சி காளைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தமிழகம் முழுவதிலும் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் வந்தனர். இதில்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து மாட்டுச்சந்தையை பார்த்து சென்றனர்.
சந்தையில் ஆறு மாத கன்றுகள், 15 ஆயிரம் ரூபாய் முதல், 30 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு மாடு, 35 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய், இன விருத்தி காளைகள் ஒரு லட்சம் முதல், 1.60 லட்சம் ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 2,300க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்றன. இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய் இருக்கும். சந்தை நேற்று முன்தினத்துடன் நிறைவுக்கு வந்தது.
இதில்லாமல் மாடுகளுக்கு தேவையான திருகாணி, சாட்டை, தும்புக்கயிறு, தாம்புக்கயிறு உள்ளிட்டவை விற்பனை செய்யும் கடைகளும் வைக்கப்பட்டன. இவற்றில் பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. கோவிலில் மொட்டையடித்த பக்தர்கள், சாட்டை வாங்கிச் செல்வது தொன்று தொட்டு நடக்கிறது. இதனால் சாட்டை விற்பனையும் களை கட்டியது.

