/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை, சிவன்மலை கோவில்களில் கார்த்திகை தீபம்
/
சென்னிமலை, சிவன்மலை கோவில்களில் கார்த்திகை தீபம்
ADDED : டிச 04, 2025 05:57 AM

சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக முருகப்பெருமானுக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோவில் ராஜாகோபுரம் முன் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
முருகப்பெருமான் ஆலயம் முன்புள்ள தீபத்துாணில் ஒரு தீபமும், மார்க்கண்டேஸ்வரர் ஆலயம் முன்புள்ள தீபத்துாணில் ஒரு தீபமும், அம்மன் கோவில் முன்புள்ள தீபத்துாணில் ஒரு தீபமும் ஏற்றினர். மேலும், சென்னிமலை டவுன், கைலாசநாதார் கோவில் முன் சொக்கப்பனை அமைக்கப்பட்டு, அங்கு சென்னிமலை முருகப்பெருமான் சமேதராக எழுந்தருளி னாார். தலைமை குருக்கள் ராமநாத சிவாச்சாரியார் சொக்கப்பனைக்கு பூஜை செய்தார். அதன் பின்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முருங்கத்தொழுவு பிரமலிங்கேஸ்வரர் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சென்னிமலை பகுதிகளில் வீடுகளிலும் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். காலையில் துாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் தீபம் ஏற்றுவதற்கு சிரமப்பட்டனர்.
* திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. அதன் பின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பத்தில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் காடையூர் காடேஸ்வரர் கோவில், மடவிளாகம் ஆருத்ரகபாலீஸ்வரர் கோவில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
* ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டது. உற்சவருக்கு அலங்காரம் செய்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, கோவிலுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, தீபத்துாணில் சிவாச்சாரியார்கள் தீபம் ஏற்றினர். பின்னர், சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர்.
* டி.என்.பாளையம் பகுதியில் உள்ள டி.ஜி. புதுார், வாணிபுத்துார், பங்களாபுதுார், கள்ளிப்பட்டி கணக்கம்பாளையம் உள்ளிட்ட கோவில்கள் மற்றும் வீடுகளில் பெண்கள் வாசலில் கோலமிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
* திங்களூர் அடுத்த, அப்பிச்சிமார் அய்யன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுதல் நிறைவேறியதை முன்னிட்டு, தானியங்களை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். அதை கோயில் நிர்வாகம், பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கு தானமாக வழங்கியது. தானமாக பெற்ற தானியங்களை கோவில் வளாகத்திலேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனர்.
* புன்செய்புளியம்பட்டி, அண்ணாமலையார் கோவிலில், கருட கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீபங்களுக்கு எண்ணெய், நெய் ஊற்றி வழிபட்டனர். அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சுப்ரமணியர் கோவிலில், மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு உட்பிரகாரத்தின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றி, மேற்கு வெளி பிரகார தீபஸ்தம்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

