/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சை மலையில் மண் சரிவு வாகனங்கள் செல்ல தடை
/
பச்சை மலையில் மண் சரிவு வாகனங்கள் செல்ல தடை
ADDED : நவ 07, 2024 01:52 AM

கோபி:ஈரோடு மாவட்டம், கோபி அருகே பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம்.
கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால், பச்சைமலை மலைப்பாதையில் உள்ள கோசாலை அருகே, கிழக்கு பகுதியில் சமீபத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, காப்பு கட்டிய பக்தர்கள் தினமும் மலைப்பாதை வழியாகவும், படிக்கட்டு வழியாகவும் வந்து செல்கின்றனர். அதே சமயம் பச்சைமலையில் இன்று சூரசம்ஹாரம், நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் செல்வர்.
தற்போது மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால், மலைப்பாதை வழியாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயணிக்க, அறநிலையத் துறையினர் தடை விதித்துள்ளனர். அதுகுறித்து மலை அடிவாரத்தில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அறநிலையத் துறையினர் கூறுகையில், 'சூரசம்ஹாரம் விழாவுக்குப்பின், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி சீரமைக்கப்படும். மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி பலவீனமாக இருப்பதால், பக்தர்கள் அவ்வழியே வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.