ADDED : ஆக 31, 2026 06:12 AM
பத்ரகாளியம்மன் கோவிலில் பின்புறம் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இங்கு எழுந்தருளியுள்ள ஈசன் செல்வீஸ்வரர் என்றும், இறைவி செல்லீஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். அந்தியூரை தலைநகராக கொண்டு ஆண்ட செல்வ கடுங்கோ என்ற மன்னன் பற்றி ஒரு கதை கூறப்படுகிறது.
பெரும் துறவியாக விளங்கியவர் அரதத்தர். இவர் நாள்தோறும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இவரது பக்தியின் ஆற்றலை அறிந்த செல்வ கடுங்கோ அரதத்தரை வணங்கி, தான் வீடு பேறடைய என்ன வழி என்று வேண்டினான். அற யாம நேரத்தில் நீ ஊருக்கு அருகில் உள்ள ஏழு சிவாலயங்களை வழிபட்டு வருவாயானால் உனக்கு வீடு பேறு கிடைக்கும் என்றார். உடனே மன்னன் குதிரையில் அமர்ந்து ஏழு சிவாலங்களையும் சுற்றி வந்தான்.
ஆனால், அவன் ஏறி வந்த குதிரை திடீரென மறைந்தது. தரையில் நின்று கொண்டிருந்தான் மன்னன். துறவி அரதத்தரிடம் சென்று நடந்ததை சொன்னான் அரசன். அதற்கு துறவி, சிவாலயங்களை சுற்றிய புண்ணியத்தால் உன் குதிரை வீடு பேறு அடைந்தது. நீயும் உன் கால்களால் நடந்து ஏழு சிவாலயங்களை சுற்றிவா, உனக்கும் வீடு பேறு கிடைக்கும் என்றார். மன்னனும் அப்படியே சென்று வீடு பேறு அடைந்ததாக வரலாறு.
கொங்கு நாட்டில் அமைந்த ஏழு சிவாலயங்களையும் இந்த மன்னன் நடந்து சென்று தரிசித்து வீடு பேறு அடைந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கம் பராசர முனிவரால் நிறுவப்பட்டது என்று புராணம் கூறுகிறது.
