/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே குடல் சுத்தமாக இருக்கும்: டாக்டர் பழனிசுவாமி அறிவுரை
/
நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே குடல் சுத்தமாக இருக்கும்: டாக்டர் பழனிசுவாமி அறிவுரை
நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே குடல் சுத்தமாக இருக்கும்: டாக்டர் பழனிசுவாமி அறிவுரை
நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே குடல் சுத்தமாக இருக்கும்: டாக்டர் பழனிசுவாமி அறிவுரை
ADDED : ஜூலை 20, 2025 02:55 AM

கோபி:''நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே குடல் சுத்தமாக இருக்கும்,'' என, அப்போலோ மருத்துவமனையின் குடல், இரைப்பை துறை தலைவர் டாக்டர் பழனிசுவாமி கூறினார்.
சென்னை, அப்போலோ மருத்துவமனையின் குடல், இரைப்பை துறை தலைவர் டாக்டர் பழனிசுவாமி, 'தமிழ்நாடு கேஸ்ட்ரோயென்டரோலாஜிஸ்ட் டிரஸ்ட்' அறக்கட்டளையை நிறுவி, செயல்படுத்தி வருகிறார். இவரது சொந்த ஊரான, ஈரோடு மாவட்டம், கோபி அருகே கள்ளிப்பட்டியில், இலவச மருத்துவ ஆலோசனை முகாமை நேற்று நடத்தினார்.
இதில், டாக்டர் பழனிசுவாமி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்து, நோயாளிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். முகாமில், 650 பேர் பங்கேற்றனர்.
டாக்டர் பழனிசுவாமி கூறியதாவது:
கள்ளிப்பட்டியில் 10வது ஆண்டாக இந்த முகாம் நடக்கிறது. கிராமங்களில் சாதாரணமாக வியாதிகள் இல்லை. டவுன் பகுதியில் தான் அதிக நோய்கள் உள்ளதாக நினைக்கிறோம். ஆனால், டவுன் பகுதிகளை போலவே கிராமப்புறங்களிலும் வாழ்க்கை முறை மாறியுள்ளது.
'ஜங்க் புட்' சாப்பிடுவதால் ஜீரணக்கோளாறு ஏற்படுகிறது. மது பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு, வயிறு சுருங்கியிருப்பதை கண்டறிந்துள்ளோம். இதுகுறித்து மக்களிடம் கலந்துரையாடல் நடத்தியுள்ளோம்.
தற்போது மலக்குடல் கேன்சர் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்காக கடந்த மார்ச் மாதத்தில், சென்னையில் சர்வதேச மாநாடு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். நல்ல பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தாலே குடல் சுத்தமாக இருக்கும்.
குறிப்பாக நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதுடன், போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் மறக்கலாம். ஆனால், உடற்பயிற்சி செய்வதை மறக்கக் கூடாது. இன்று வீட்டில் சமையல் செய்யும் பழக்கம் குறைந்து விட்டது. இது, பல வியாதிகளுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில், டாக்டர்கள் சத்தியபாமா, மோகன்பிரசாத், பிரேம்குமார், பிரமநாயகம், கார்த்திகேயன், பாசுமணி, பரத்குமார், பாலகுமரன், செந்துாரன் என்ற கீர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.