/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தோனிமடுவு தடுப்பணை பகுதியில் அமைச்சர் ஆய்வு
/
தோனிமடுவு தடுப்பணை பகுதியில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 28, 2025 01:40 AM
அந்தியூர், அந்தியூர் அருகே, பர்கூர் கிழக்கு மலைப்பகுதியில் பெய்யும் மழை வெள்ளம், பாலாற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது. மழை வெள்ளத்தை, தடுப்பணை கட்டி, சேலம் மாவட்டம் கொளத்தூர், ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அந்தியூர் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, விவசாயிகளும், தோனிமடுவு திட்ட ஒருங்கிணைப்பு குழுவினரும், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து அமைச்சர் முத்துசாமி, கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், தோனிமடுவு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பணை கட்டுவதற்கு சாதகமாக உள்ள இடங்களை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின், அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அந்தியூர் தொகுதி தோனிமடுவு பள்ளத்தாக்கில் தடுப்பணை கட்டி, மழை நீரை திருப்பி விடும்போது, கொளத்துார், பவானி, அந்தியூர் சுற்று வட்டார வறண்ட ஏரிகள் நிரம்பும். மேலும், வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். இப்பகுதியில் ஆய்வு நடத்தி, தடுப்பணை கட்ட வனத்துறை, நீர்வளத்துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில், விரைவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நீர் தேங்கும் அளவு, மதிப்பீடு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என அறிந்து, அடுத்த கட்டமாக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் இத்திட்டம் செயல்
படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.
ஈரோடு வன அலுவலர் குமிழி வெங்கட அப்பால நாயுடு, செயற்பொறியாளர் நீர்வளத்துறை ரவி, உதவி செயற்பொறியாளர் லோக பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.