ADDED : நவ 01, 2024 01:20 AM
கோவிலில் திருட வந்த மர்ம நபர்கள்
ஈரோடு, நவ. 1-
ஈரோடு அருகே, கோவிலில் புகுந்த மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட முயன்றுள்ளனர்.
கொடுமுடி அருகே, மன்னாதம்பாளையத்தில் மத்தியபுரிஸ்வரர், கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஜூலை முதல் நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். தீபாவளிக்காக கடந்த, 29ல் சொந்த ஊர் சென்றனர். 30 மாலை கோவில் குருக்கள் கார்த்திகேயன், பாலாலயத்துக்கு பூஜை செய்து விட்டு பூஜை அறை, பொருட்கள் வைக்கும் அறை, கழிப்பறைகளை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை வந்து பார்த்த போது பூஜை அறை, பாதுகாப்பு அறை, கழிப்பறை பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அறைகளில் இருந்த பொருட்கள் கலைக்கப்பட்டு இருந்தது. கோவில் குருக்கள் கார்த்திகேயன், செயல் அலுவலர் உமா செல்வி அளித்த புகார்படி மலையம்பாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அங்கிருந்த நான்கு 'சிசிடிவி' கேமராக்களில் மர்ம நபர்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் கோவிலில் எதுவும் இல்லாததால், திருடர்கள் ஏமாந்து சென்றுள்ளனர்.