/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாசு ஏற்படுத்தும் ஆலைகள் விவகாரம் பவானியில் பேச்சுவார்த்தை தோல்வி
/
மாசு ஏற்படுத்தும் ஆலைகள் விவகாரம் பவானியில் பேச்சுவார்த்தை தோல்வி
மாசு ஏற்படுத்தும் ஆலைகள் விவகாரம் பவானியில் பேச்சுவார்த்தை தோல்வி
மாசு ஏற்படுத்தும் ஆலைகள் விவகாரம் பவானியில் பேச்சுவார்த்தை தோல்வி
ADDED : பிப் 09, 2024 11:06 AM
பவானி: பவானியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழில் நிறுவனங்களை மூடுவது தொடர்பாக, நகர்மன்ற தலைவர் சிந்துாரி தலைமையில், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. கமிஷனர் மோகன்குமார், துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன், ஈரோடு மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், போலீசார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற, 18வது வார்டு மக்கள், 'சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஏர்லுாம் பட்டறை, சுவிட்ச் பாக்ஸ் தொழிற்சாலைகளை உடனடியாக மூட வேண்டும்' என்றனர். அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களோ, 'தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும்; சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் தொழிற்சாலை இயங்கி வருகிறது' என்றனர்.
அதேசமயம் 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள் இயங்குவது தெரிய வந்தால், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்படும்' என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், உடனடியாக தொழில் நிறுவனங்களை மூட வலியுறுத்திய ஒரு தரப்பினர், கூட்டத்திலிருந்து கூச்சலிட்டபடி வெளியேறியதால், பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனால் அடுத்தக்கட்ட அமைதி பேச்சுவார்த்தை, பவானி தாலுகா அலுவலகத்தில் அடுத்த வாரம் நடக்கும் என்று, கமிஷனர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க., நகர செயலாளர் அறிவழகன், பா.ஜ., நகர தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

