ADDED : ஆக 12, 2024 06:45 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் வட்டாரத்தில் நால்ரோடு, கொத்தமங்கலம், அம்மாபாளையம், சித்தன்குட்டை உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், வாழை பயிரிடப்பட்டுள்ளது.
இதில், 80 சதவீதம் நேந்திரன் ரகம், மற்றும் கதளி, ஜி-9 ரகமும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழைத்தார், அதிக அளவில் கேரளா, அடுத்தபடியாக மும்பைக்கு செல்கிறது. நேந்திரன் ரக வாழைதார் கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் ஆண்டுதோறும் நேந்திரன் வாழை விற்பனை அமோகமாக இருக்கும். ஓணம் பண்டிகை நெருங்குவதால் நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் பவானிசாகர் வட்டார விவசாயிகள், அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார் உடனடியாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இரண்டு வாரத்துக்கு முன் கிலோ, 25 ரூபாய்க்கு விற்ற நேந்திரன், 40 முதல் 50 ரூபாய் வரை தற்போது விலை கிடைப்பதால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.