/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருங்கல்பாளையத்தில் அமையும் புது காந்தி சிலை
/
கருங்கல்பாளையத்தில் அமையும் புது காந்தி சிலை
ADDED : மார் 05, 2025 06:15 AM
ஈரோடு: ஈரோட்டில், கருங்கல்பாளையம் காவிரி சாலையில், சிறு மண்டப அமைப்புடன் காந்தி சிலை இருந்தது. கடந்த, 1970ல் அப்போதைய காங்., தலைவர் காமராஜரால் சிலை திறக்கப்பட்டது. இந்தப்பகுதி தற்போது பிரதான சாலை, முக்கிய வாகன திருப்பமாக மாறிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகி, அவ்வப்போது விபத்தும் நடந்தது.
இந்நிலையில் ஆர்.கே.வி., சாலை - காவிரி சாலையை மேம்படுத்த ஒருங்கிணைந்த சாலை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில், 11.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் மழை நீர் வடிகாலுடன் நடைபாதை, கருங்கல்பாளையம் முதல் கடை வீதி, டவுன் போலீஸ் ஸ்டேஷன் வரை சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்கத்தை நெடுஞ்சாலை துறையினர் பிற துறையுடன் இணைந்து செய்கின்றனர். இதனால் காந்தி சிலையை அகற்ற முடிவானது. அதேசமயம் இதற்கு பதிலாக நுாலக பீடத்துடன் வெண்கலத்தாலான முழு உருவ காந்தி சிலை அமைத்து நிறுவும் பணி நேற்று முன்தினம் இரவு தொடங்கி நள்ளிரவில் முடிந்தது.
இப்பணிகளை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அமைக்கும் இடத்தை முடிவு செய்த பின், விரைவில் சிலை திறப்பு விழா செய்யப்படும். இடையூறாக உள்ள பழைய காந்தி சிலை, அதை சுற்றிய சிறு மண்டபம் போன்ற அமைப்பையும் முழுமையாக விரைவில் அகற்றி, தார்ச்சாலை அமைக்க உள்ளனர்.