/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைத்தேர்தலை மனதில் வைத்து புதிய திட்டங்கள் அறிவிப்பு: பா.ஜ., மாநில நிர்வாகி பட்டியலிட்டு குற்றச்சாட்டு
/
இடைத்தேர்தலை மனதில் வைத்து புதிய திட்டங்கள் அறிவிப்பு: பா.ஜ., மாநில நிர்வாகி பட்டியலிட்டு குற்றச்சாட்டு
இடைத்தேர்தலை மனதில் வைத்து புதிய திட்டங்கள் அறிவிப்பு: பா.ஜ., மாநில நிர்வாகி பட்டியலிட்டு குற்றச்சாட்டு
இடைத்தேர்தலை மனதில் வைத்து புதிய திட்டங்கள் அறிவிப்பு: பா.ஜ., மாநில நிர்வாகி பட்டியலிட்டு குற்றச்சாட்டு
ADDED : டிச 23, 2024 09:27 AM
ஈரோடு: 'இடைத்தேர்தலை மனதில் வைத்து புதிய திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார்' என்று, பா.ஜ., மாநில நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பா.ஜ., மாநில விவசாய அணி செயலாளர் சுப்பிரமணியம் விடுத்துள்ள அறிக்கை: கடந்த, 20ல் ஈரோடு வந்த தமிழக முதல்வர், 1,369 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கும், உதவிகள் வழங்குவதற்கான நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் என்பது செய்தி. மாவட்டத்துக்கான எட்டு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசினார்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத எண்ணற்ற வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்தது. தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த திட்டங்கள் பெரும்பாலானவற்றை இதுவரை நிறைவேற்றவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின்போது, ஈரோடு மாவட்டத்தில் அரசு வேளாண்மை கல்லுாரி அமைக்கப்படும். ஈரோட்டில் சாய மற்றும் தோல் தொழிற்சாலை கழிவுகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சி.என்.கல்லுாரியை அரசு கல்லூரியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு-புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும். ஈரோட்டில் உணவு பூங்கா அமைக்கப்படும். ஈரோடு நகரில் தோல் பதனிடும் பயிற்சி மையம் அமைக்கப்படும். ஈரோட்டில் இந்திய ஜவுளி தொழிற் அறிவியல் பல்கலை அமைக்கப்படும். சி.எஸ்.ஐ., ஆக்கிரமித்துள்ள, 80 அடி சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சத்தியமங்கலத்தில் நறுமண தொழிற்சாலை அமைக்கப்படும்.
ஈரோடு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காளை மாட்டு சிலையிலிருந்து மூலப்பாளையம் பெட்ரோல் பங்க் வரை மேம்பாலம், கலெக்டர் அலுவலகத்திலிருந்து திண்டல் வரை மேம்பாலம் அமைக்கப்படும்என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள், ஈரோடு மக்களுக்கு தி.மு.க.,வால் அளிக்கப்பட்டன. இவற்றில் ஒரு வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் கடந்த, ௨௦ல் ஈரோடு வந்த முதல்வர் ஸ்டாலின், ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட வணிக வளாகம் உட்பட பல்வேறு கட்டமைப்புகளை, தங்கள் ஆட்சி திட்டம் போன்று திறந்து வைத்துள்ளார்.
ஏற்கனவே அறிவித்தத் திட்டங்கள் எதையும் நிறைவேற்றாமல் புதிதாக தார் சாலைகள், 100 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். போலீஸ் அலுவலகத்துக்கு, 15.37 கோடி ரூபாயில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்து விட்டு சென்று விட்டார்.
கள ஆய்விற்காக வருகிறேன் என்று சொன்ன முதல்வர் நஞ்சனாபுரத்திலும், கட்சி நிகழ்ச்சிக்கு மேட்டுக்கடை செல்லும் பொழுது, ஒரு விசைத்தறி கூடத்தில் ஆய்வு நடத்திவிட்டு வேறெந்த ஆய்வு பணியும் மேற்கொள்ளாமல், அரசு நிகழ்ச்சியில் மட்டும் கலந்துகொண்டு சென்னை சென்று விட்டார். முதல்வர் வருகையினால் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஏற்கனவே அறிவித்தத் திட்டங்களை நிறைவேற்றாமல் புதிய திட்டங்களை அறிவித்திருப்பது, ஈரோடு கிழக்கு இடை தேர்தலை மனதில் வைத்தே, என்று எண்ண வேண்டியுள்ளது. முதல்வரின் இந்த வெற்று அறிவிப்புகள், வழக்கம்போல் கானல் நீராகவே முடியும். இருக்கும் ஓராண்டு காலத்திற்குள் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற, தி.மு.க., அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.