ADDED : மார் 12, 2025 08:04 AM
வேலாம்பட்டி கோவிலில் குண்டம் விழா அமோகம்
அந்தியூர்: பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வேலாம்பட்டி சிவலிங்கேஸ்வரா கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் விழா நேற்று நடந்தது. இதில் கோவில் பூசாரிகள் ஐந்து பேர் மட்டும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வேலாம்பட்டி, பர்கூர், தேவர்மலை, மாக்கம்பாளையம், குன்றி உள்ளிட்ட பர்கூர் மலையை சுற்றியுள்ள, 150க்கும் மேற்பட்ட லிங்காயத்து இன மக்கள் கலந்து கொண்டனர்.
காங்கேயம் அருகே மீண்டும் நாய்கள் கடித்து 2 ஆடு பலி
காங்கேயம்: காங்கேயம் அருகே நிழலி கிராமம், பங்காம்பாளையம் கொத்தங்காட்டு தோட்டத்தில் வசிக்கும் விவசாயி சுரேஷ், 40; தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று தோட்டத்தில் புகுந்து தெருநாய்கள் கடித்ததில் இரு ஆடுகள் பலியாகி விட்டன. வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ரூ.20.12 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 327 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 145.10 முதல், 155.90 ரூபாய்; இரண்டாம் தரம், 117.99 முதல், 148.88 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 14,209 கிலோ கொப்பரை, 20.12 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
தி.மு.க., தெற்கு ஒன்றியத்தில் பூத் முகவர்கள் ஆலோசனை
காங்கேயம்: காங்கேயம் தெற்கு ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தில், ஓட்டுச்சாவடி நிலை முகவர் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய ஓட்டுச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள நிலை முகவர்களுக்கு பணிகள் குறித்தும், வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. காங்கேயத்தில் இன்று நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்துக்கான முன்னேற்பாடு குறித்தும் அறிவுரை வழங்கினர். காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, டீச்சர்ஸ் காலனி, மோகன் குமாரமங்கலம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன், 49; இவர் மனைவி அனுசுயா. ராஜேஷ் கண்ணன் கார்களை வாடகைக்கு விட்டு டிராவல்ஸ் தொழில் செய்தார். வாடகை சரியாக இல்லாததால் இன்சூரன்ஸ் கட்டவும், மாத கடனை கட்டவும் பணமின்றி சில மாதங்களாக மன வருத்தத்தில் இருந்தவர் புலம்பி வந்துள்ளார்.உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்கிட்டு கொண்டார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பேக்கரியில் மொபைல் திருடிய டிரைவர் கைது
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த வரப்பாளையம் அருகே ஒரு பேக்கரியில், கடந்த, 8ம் தேதி நள்ளிரவில் கடைக்கு வந்த ஒருவர், உரிமையாளர் மகேஸ்வரன் மொபைல்போனை திருடி சென்றார். புகாரின் அடிப்படையில் தாராபுரம் போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். இது தொடர்பாக தென்காசி மாவட்டம் கொடிபுதுாரை சேர்ந்த முருகன், 50, என்பவரை, போலீசார் கைது செய்தனர். டெம்போ டிரைவரான இவர், டீ குடிக்க வந்தபோது, கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், மொபைல்போனை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். கைது செய்த தாராபுரம் போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்துள்ள மடத்துபாளையத்தில், புதியதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர், நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர்கள் வழங்கினர். திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டம் இயக்குனர் மலர்விழி உள்ளிட்ட அதிகாரிகள், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.