ADDED : மே 29, 2024 07:12 AM
54 அடியை எட்டிய பவானிசாகர் அணை
புன்செய்புளியம்பட்டி : பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளா பகுதிகளில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரிக்கவே, 44 அடியாக இருந்த அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியது. நேற்று காலை, 54 அடியை எட்டியது. அதேசமயம் நீர்வரத்து, 728 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு, 5.4 டி.எம்.சி.,யாக இருந்தது.
த.வெ.க., அன்னதானம்
சென்னிமலை: உலக பட்டினி தினத்தையொட்டி, சென்னிமலையை அடுத்த அம்மாபாளையத்தில், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னிமலை ஒன்றிய இளைஞரணி தலைவர் மோகன் குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருண், நகர இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் சபரி ஆகியோர் அன்னதானம் வழங்கினார். நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாலையின் இருபுறங்களிலும் 500 மரக்கன்று நட முடிவு
பவானி : பவானி-மேட்டூர் சாலையில், குருப்பநாயக்கன்பாளையம் அருகே வலது புறமாக பிரிந்து செல்லும் புறவழிச் சாலை, பவானி-அந்தியூர் சாலை, பவானி-அத்தாணி சாலை, பவானி-கவுந்தப்பாடி சாலையை கடந்து, சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. ௮ கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்படும் இந்த சாலைப்பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.வயல்வெளி வழியாக நிலம் கையகப்படுத்தப்பட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நட, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, 500 மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டு, விரைவில் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை துவங்கும் மேட்டூர் ரோட்டில், 18 புளிய மரங்கள் அகற்றப்படுகிறது. மரங்களை வெட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் நேற்று அளவீடு செய்தனர்.
பள்ளி ஆசிரியர் மாயம்
அறச்சலுார் : அறச்சலுார், வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன் பாபு, 39; ஞானபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆசிரியர். கடந்த, 20ம் தேதி மதியம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியேறியவர் வீடு திரும்பவில்லை. உறவினர், நண்பர்கள் வீடுகளில் தேடியும் தகவல் இல்லை. இதுகுறித்து மோகன்பாபு மனைவி மேனகா அளித்த புகாரின்படி, அறச்சலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* ஈரோடு, பெரிய சேமூர், எல்லப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த தேவராஜ் மகள் நந்தினி, 17; தனியார் கல்லுாரி மாணவி. கடந்த, 17ம் தேதி வீட்டில் இருந்தவர் மாயமானார். நந்தினியின் தாய் லதா புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.
குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்தவர் சாவு
மொடக்குறிச்சி : மொடக்குறிச்சி, நன்செய் ஊத்துக்குளி, வடக்கு வீதியை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி, 59, தறி பட்டறை தொழிலாளி. சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோய் இருந்தது. கடந்த, 27ல் பட்டறையில் வேலை இல்லாததால் மது குடித்து விட்டு, கணபதிபாளையத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். படிக்கட்டில் ஏறும் போது கால் தவறி காவிரி ஆற்றுக்குள் விழுந்தார். போதையில் இருந்ததாலும், ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாலும் மூழ்கியதில் பலியானார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் நடுவில் விழுந்த முதியவர் பலி
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்கு நேற்று முன் தினம் இரவு, 9:10 மணியளவில் கோவையில் இருந்து ஈரோடுக்கு அந்தியூர் கிளையை சேர்ந்த அரசு பஸ் வந்தது. நுழைவு பகுதியை கடந்தபோது ஓரமாக நின்றிருந்த, 65 வயது முதியவர் திடீரென பஸ் நடுவில் விழுந்தார். பின்புற சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் பலியானார். ஈரோடு டவுன் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
எழிலரசி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
ஈரோடு: பவானியை அடுத்த தளவாய்பேட்டையில், எழிலரசி மாரியம்மன் கோவில், 70ம் ஆண்டு பொங்கல் விழா, கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக இன்று அம்மன் அழைத்தல், பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை (30ம் தேதி) கம்பம் பிடுங்குதலும், நாளை மறுநாள் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. ஜூன், 1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
மின் கசிவால் தீ விபத்து; மூன்று வாகனங்கள் நாசம்
கோபி: கோபி அருகே சிங்கிரிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், 47, விவசாயி. நேற்று குடும்பத்தார் மட்டும் வீட்டில் இருந்தனர். வீட்டருகே மின் கம்பத்துக்கு செல்லும் மும்முனை மின்சார லைனில், மதியம், 2:00 மணிக்கு திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அருகேயுள்ள வைக்கோல் போரில் தீப்பிடித்து, பக்கத்தில் நின்றிருந்த ஈச்சர் வேன், ஸ்பிளென்டர் பைக் மற்றும் ஸ்கூட்டியில் பிடித்து எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் மூன்று வாகனங்களும் தீயில் எரிந்து விட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் டிரைவர் ஓட்டி வந்த வேன் மோதி முதியவர் பலி
பவானி: பவானி அருகே கண்ணடிபாளையம், துருசாம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன், 72; மொபட்டில் பவானிக்கு நேற்று சென்றார். எதிர் திசையில் சிக்னல் போடாமல் வலது புறமாக வந்த ஆம்னி வேன் செங்கோட்டையன் மீது மோதியது. சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வேனை ஓட்டி வந்த பவானி, காடையம்பட்டியை சேர்ந்த மோகனாம்பாள் மீது, பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வணிகர்கள் ஆலோசனை
சத்தியமங்கலம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் பேரமைப்பு துவக்க விழா ஆலோசனை கூட்டம், சத்தியமங்கலத்தில் நடந்தது. பேரமைப்பின் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் செல்வம், மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி உட்பட சத்தி வட்டார, கிளை, சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத் துணைத் தலைவராக சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
குதிரை வண்டி மீது கார் மோதி ஒருவர் பலி
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த முள்ளங்கி வலசை சேர்ந்தவர் பழனிச்சாமி, 71; பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி, 32; இருவரும் தங்களுக்கு சொந்தமான குதிரை வண்டிகளில், நேற்று முன்தினம் முத்துாரில் உள்ள கோவிலுக்க சென்று விட்டு, இரவில் வீடு திரும்பினர்.நள்ளிரவு, 11:௦௦ மணியளவில், ரெட்டிபாளையம் அருகே குதிரை வண்டிகள் சென்ற போது, கோவிந்தாபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஓட்டி வந்த புது கார், குதிரை வண்டிகள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.