sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 01, 2024 11:29 AM

Google News

ADDED : ஜன 01, 2024 11:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மோசடி வழக்கில் கைதானவர்

மகளிடம் விசாரிக்க முடிவு

அரசு வேலை வாங்கி தருவதாக, 30.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்து கைதான வழக்கில், சிறையில் உள்ளவரின் மகளிடம் விசாரிக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பவானி, ஒரிச்சேரி புதுார், அண்ணா நகரை சேர்ந்தவர் பூவழகன், 37, தமிழ் எம்.ஏ.., பட்டதாரி. கவுந்தப்பாடி, சலங்கபாளையம், அய்யன்காட்டை சேர்ந்த ஜோதிடர் அன்பானந்தன், 53; அரசு வேலை வாங்கி தருவதாக கூறிய அன்பானந்திடம், 5.50 லட்சம் ரூபாயை பூவழகன் தந்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. இதேபோல் ஈரோட்டை சேர்ந்த மலர் கொடியிடம், 5 லட்சம் ரூபாய்; கவுந்தப்பாடி, செம்பூத்தாம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரியிடம், 20 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளார். இதற்கு உறுதுணையாக அன்பானந்தன் மனைவி கோகிலாம்பாள் இருந்ததாக, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில், பூவழகன் புகாரளித்தார். விசாரித்த போலீசார் அன்பானந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான கோகிலாம்பாளை தேடி வருகின்றனர்.

இதனிடையே அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாாற்றும், அன்பானந்தன் மகள் பவித்ராவிடம் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெருந்துறையில்

குட்கா விற்ற 21 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க, எஸ்.பி., ஜவகர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பெருந்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு வாரமாக கடைகளில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் குட்கா பொருட்களை விற்றதாக, 21 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 67.95 கிலோ குட்காவை பறிமுதல் செய்து, கடைகளுக்கு 'சீல்' வைத்ததாக, போலீசார் தெரிவித்தனர்.

கொடிவேரியில் குவிந்த

சுற்றுலா பயணிகள்

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோரும் வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தடுப்பணையில் குளித்து மகிழ்ந்ததுடன், சுடச்சுட விற்பனையான, மீன் ரோஸ்ட்டுகளை தின்று சுவைத்தனர்.

விடுதலை சிறுத்தைகள்

கட்சியினர் ஆலோசனை

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்மாபேட்டை அருகே சொக்கநாதமலையூரில், உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மகளிரணி முகாம் கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை குறித்தும் பேசினர். திருச்சியில் நடக்கும் மாநாட்டுக்கான நோட்டீஸ் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன், மகளிரணி செவ்வந்தி துரைசாமி, வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உழவர் சந்தைகளில் ஒரே நாளில்

ரூ.21.34 லட்சத்துக்கு விற்பனை

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை மற்றும் ஈரோட்டில் பெரியார் நகர், சம்பத் நகரில் உழவர் சந்தை செயல்படுகிறது.

இவற்றுக்கு நேற்று, 65,488 கிலோ காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 21 லட்சத்து, 34 ஆயிரம் ரூபாய். மொத்தம், 224 விவசாயிகள், 10,146 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர். ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு, 27 ஆயிரத்து, 170 கிலோ காய்கறி, பழங்கள் வரத்தாகி, 9.௦௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இங்கு, 113 விவசாயிகள், 4,851 வாடிக்கையாளர் வந்து சென்றனர்.

ஆண்டின் இறுதி நாளான நேற்று வழக்கத்தை விட அதிக வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்ததாக, அலுவலர்கள் தெரிவித்தனர்.

கழிவுநீர் குட்டையான கோவில் குளம்

ஈரோடு அருகே கோவில் குளம், கழிவுநீர் குட்டையாகி விட்டது. கழிவுநீர் கலப்பதை தடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு அருகே முத்தாம்பாளையம் இரட்டைபாளி பாறை வலசில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் உள்ள குளம், அப்பகுதி குடிநீர் ஆதாரமாக இருந்தது. இந்நிலையில் குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி இல்லாததால், குளத்தில் தேங்குகிறது. இதனால் குளம் கழிவு நீர் குட்டையாக மாறி, கொசுக்களின் உற்பத்தி ஸ்தலமாகி விட்டது.இதனிடையே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, 2020ல் அப்போதைய கலெக்டரிடம் மனு தரப்பட்டது. உரிய ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற, தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதனால் யாக சாலை உள்ளிட்ட பணிகளுக்கு இடம் தேவைப்படுகிறது. எனவே கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தான்தோன்றியம்மன்

மலர் பல்லக்கில் பவனி

மொடச்சூர் தான்தோன்றியம்மன், மலர் பல்லக்கில் பவனி வந்தார்.

கோபி அருகே மொடச்சூரில் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா, கடந்த, 28ல் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதையடுத்து தேரோட்டம் முடிந்து, மலர் பல்லக்கு ஊர்வலம் நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு துவங்கியது. பிரமாண்ட மலர் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட தான்தோன்றியம்மன், தேர்வீதி, பெரிய மொடச்சூர், காட்டுவலவு, சின்னமொடச்சூர் மற்றும் திரு.வி.க.,வீதி வழியாக, நேற்று காலை 6:00 மணிக்கு பல்லக்கு கோவிலை அடைந்தது.

அதையடுத்து விநாயகர், சூலவேல் மற்றும் உற்சவராக வீற்றிக்கும் அம்மனுக்கு, நஞ்சை புளியம்பட்டியில் உள்ள பவானி ஆற்றில், தெப்பத்தேர் உற்சவம் நடந்தது. அதையடுத்து தேர்வீதி, சீதாலட்சுமிபுரம் மற்றும் ஹவுசிங் யூனிட் பகுதிகளில், அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

காங்கேயம் இன மாடுகள்

ரூ.23 லட்சத்துக்கு விற்பனை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மாடுகளை வாங்க விவசாயிகள் வந்தனர். இடைத்தரகரின்றி மாடுகளை விலை பேசி வாங்கினர். சந்தைக்கு மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 82 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல், 91 ஆயிரம் ரூபாய் வரை விற்றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 60 கால்நடைகள், 23 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.

இ.கம்யூ., குழு கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்ட, இந்திய கம்யூ., கட்சி குழு கூட்டம், நேற்று ஈரோட்டில் நடந்தது. பொன்னுசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் துளசிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிக்கு இதுவரை மத்திய அரசு நிதி வழங்கவில்லை. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கை கண்டித்தும், தமிழக அரசு கோரிய நிதியை வழங்க வலியுறுத்தியும் வரும், 8ல் ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.

ஆடிட்டர் வீட்டில்5 பவுன் நகை திருட்டு

கவுந்தப்பாடி அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்கண்ணன், 37, ஆடிட்டர்; குடும்பத்துடன் கடலுார் சென்றவர், கடந்த, 27ல் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, ஐந்தரை பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூரில் கூடுதல் 'சிசிடிவி' கேமரா

திருப்பூரில் கூடுதலாக, 2,௦௦௦ கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது என்று போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: பெண்கள், குழந்தைகள், மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தவும், போலீசாரின் பணிகளை நவீனப்படுத்தும் விதமாகவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். முக்கியமான வழக்குகளில் விரைந்து விசாரணை செய்து, ஒரு மாதத்துக்குள் வழக்கு விசாரணை முடிந்து கோர்ட் மூலம், 24 வழக்குகளில், 41 பேருக்கு தண்டனை பெற்று தரப்பட்டது.

விபத்து குறைக்கவும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு, மூன்று இடங்களில் புதிதாக போக்குவரத்து சிக்னல்கள் நிறுவப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் புஷ்பா சந்திப்பில் சிக்னல் இல்லாமல் வாகனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முக்கிய ரோடுகள், பகுதிகள், 5 ஆயிரம் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பட்டு வந்தது. இவ்வாண்டில் கூடுதலாக, 2 ஆயிரம் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பஸ்-வேன் மோதலில் 2 பேர் காயம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோபி செல்லும் தனியார் பஸ், நம்பியூரை அடுத்த கே.மேட்டுப்பாளையம் பிரிவு அருகே நேற்று வந்தது. அப்போது எதிரே கோபியில் இருந்து கோவைக்கு ஒரு பிக்-அப் வேன் சென்றது. கே.மேட்டுப்பாளையம் பிரிவில் வளைவான பகுதியில் திரும்பியபோது, இரு வாகங்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. பஸ்சில், 40 பயணிகள் இருந்தனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. பிக்-அப் வேனில் வந்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விஜயகாந்த்துக்கு கட்சியினர் அஞ்சலி

மறைந்த தே.மு.திக., தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரோடு ஒன்றிய தே.மு.தி.க., சார்பில், அனைத்து கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம், காலிங்கராயன்பாளையத்தில் நேற்று நடந்தது. ஊர்வலம் நிறைவில் விஜயகாந்த் போட்டோவுக்கு அனைவரும் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பெருந்துறையிலும், அனைத்து கட்சிகள் சார்பில், நேற்று மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆங்கில புத்தாண்டால்

பூக்கள் விலை உயர்வு

ஆங்கில புத்தாண்டு பிறப்பால், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில், நேற்று விற்பனை களை கட்டியது. அதே சமயம் பூக்களின் விலையும் சற்று உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ, 1,740 ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 1,900 ரூபாயாக நேற்று உயர்ந்தது. 890 ரூபாய்க்கு விற்ற முல்லை, 1,125 ரூபாய்; 750 ரூபாய்க்கு விற்ற காக்கடான், 950 ரூபாய்; 750க்கு விற்ற ஜாதிமுல்லை, 1,050 ரூபாய்க்கு விற்றது.

கனகாம்பரம்-1,050 ரூபாய், செண்டுமல்லி-110, கோழிக்கொண்டை-63, சம்பங்கி-120, செவ்வந்தி-160 ரூபாய்க்கும் விற்றது.

'சிவப்பு மல்லி' இன்னும் வாடா மல்லி

வெள்ளித்திரை கதாநாயகன் பேசும் வசனங்களை, அப்போதைய வாழ்வியல் சூழலுடன் ஒப்பிட்டு பார்க்கும் மனநிலையும் ஒருவகையான ரசிப்புத்தன்மை. இந்த வகை ரசிகர்களை திருப்பூர் அதிகம் கொண்டுள்ளது. இதை விஜயகாந்தின் மறைவு, வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

'திருப்பூருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த விஜயகாந்த், ஏராளமான நண்பர்களை வைத்திருக்கிறார். அவரது எளிமை, பழகும் விதம், உதவும் மனப்பான்மை ஆகியவை தான், அவருக்கு இத்தனை பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது' என்கின்றனர், அவரை பற்றி அறிந்தவர்கள். அவர், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், கடந்த, 1981ல், ராம நாராயணன் இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மல்லி' என்ற படம், இன்றும் அவரது ரசிகர்களால் பேசப்படுகிறது; போற்றப்படுகிறது. ஒரு கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலைவர்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் விஜயகாந்தும்,

சந்திரசேகரும் நடித்திருப்பர்.

கோபம் கொப்பளிக்க, கண்கள் சிவக்க அவர் பேசிய வசனங்கள், ''எரிமலை எப்படி பொறுக்கும்'' பாடல் உழைக்கும் வர்க்கத்தினரின் உள்ளத்தில் இன்றளவும் ஆழ பதிந்திருக்கிறது. அதற்ககேற்ப, அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்த அனைவரும், அந்த படத்தை சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.

வெள்ளை பெயின்ட் மங்கிய வேகத்தடை

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் சத்தி அருகே ஆசனுார் செல்லும் வழியில், திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் முதல் காரப்பள்ளம் வரை, பல இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதமாவதால் இதற்கு பூசப்பட்ட வெள்ளை பெயின்ட் தற்போது மங்கி விட்டது. இதனால் பகலிலேயே அருகில் சென்றால்தான் வேகத்தடை தெரிகிறது. அதேசமயம் இரவில் அருகில் சென்று பிரேக் பிடிக்கும் வாகனங்கள் மீது, பின்னால் வரும் வாகனங்கள் மோதுவது அதிகரித்துள்ளது. எனவே இதுபோன்று காணப்படும் வேகத்தடைக்கு, வெள்ளை பெயின்ட் அடித்தும், இரவில் ஒளிரும் விளக்குகளை பொருத்தவும், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து கட்சியினர் மவுன ஊர்வலம்

தே.மு.தி.க.. தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, அனைத்து கட்சியினர் பங்கேற்ற மவுன ஊர்வலம் அந்தியூரில் நேற்று நடந்தது. அந்தியூர் ஒன்றிய தே.மு.தி.க., சார்பில் நடந்த ஊர்வலத்துக்கு, ஒன்றிய செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். இதில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட அனைத்து கட்சியினர் பங்கேற்றனர்.

பத்ர காளியம்மன் கோவிலில் தொடங்கிய ஊர்வலம் சிங்காரவீதி, பர்கூர் ரோடு வழியாக பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகில் முடிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் போட்டோவுக்கு அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து அ.தி.மு.க.,வை சேர்ந்த மோகன்குமார், வேலு என்கிற மருதமுத்து, பா.ம.க.,வின் கோபால், தே.மு.தி.க., பேரூர் செயலாளர் முனாப், அத்தாணி பேரூர் செயலாளர் விஜயகுமார் மற்றும் தே.மு.தி.க., ஊராட்சி, கிளை தொண்டர்கள், மகளிரணி தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இறந்தவருக்கு இழப்பீடு கேட்டு ஜி.ஹெச்.,ல் போராட்டம்

விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்க கோரி, அரசு மருத்துவமனை வளாகத்தில், உடலை பெற மறுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தாராபுரத்தை அடுத்த கரையூரை சேர்ந்தவர் முருகன், 52; நேற்று முன்தினம் இரவு ஸ்பிளெண்டர் பைக்கில் மனைவி வளர்மதியுடன் சென்றார். பகவான் கோவில் சாலையில், கரையூர் குளம் அருகே சென்ற போது, பெரமியத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி, 58, ஓட்டி வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட தம்பதியர் படுகாயம் அடைந்தனர்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகன் இறந்தார். வளர்மதி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உயிரிழந்த முருகனுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை உடலை பெற மாட்டோம் என்று கூறி, அவரது உறவினர்கள், தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்தனர். இதனால் காலை, ௧௧:௦௦ மணிக்கு தொடங்கிய போராட்டம், மாலை, ௫:௦௦ மணிக்கு முடிந்தது.






      Dinamalar
      Follow us