sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

/

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு

செய்திகள் சில வரிகளில்... ஈரோடு


ADDED : ஜன 12, 2024 01:28 PM

Google News

ADDED : ஜன 12, 2024 01:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொங்கலம்மன் கோவிலில்

பொங்கல் விழா பூச்சாட்டு

ஈரோடு, கொங்கலம்மன் கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா வரும், 16-ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. 17-ம் தேதி அதிகாலை பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

அதன் பின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்று காலை கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. 23-ம் தேதி பொங்கல் வைபவம், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம், 25-ம் தேதி காலை, 8:45 மணிக்கு நடக்கிறது. 26-ம் தேதி காலை விடையாற்றி உற்சவம், சப்பரத்தில் அம்மன் உட்பிரகார திருஉலா, மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இதை தொடர்ந்து, ௧௦௮ சங்காபிஷேக விழா, மாலையில் தெப்போற்சவம் நடக்கிறது.

பா.ஜ., போராட்டத்தால்

பொது ஏலம் தள்ளிவைப்பு

சென்னிமலை டவுன் பஞ்., சார்பில், தைப்பூச திருவிழாவுக்கு பொது சுகாதார பணி செய்தல், சாலையோர தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலித்தல், ஒலிபெருக்கி விளம்பரம் செய்தல் ஆகியவற்றுக்கு, நேற்று மதியம் பொது ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னிமலை வட்டார பா.ஜ., நிர்வாகிகள் ஒன்றிய பொது செயலாளர் வசந்தகுமார் தலைமையில், அலுவலகத்துக்கு சென்றனர்.

'பொது ஏல அறிவிப்பு முறையாக இல்லை. ரகசியமாக நடத்த ஏற்பாடு செய்துள்ளீர்கள். இப்படி ஏலம் நடத்தக்கூடாது; நாளிதழில் விளம்பரம் கொடுத்தே நடத்த வேண்டும்' என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொது ஏலத்தை, நிர்வாக காரணங்களுக்காக தள்ளி வைப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்காகசிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகை வரும், 15ல் கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர, அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மண்டல அலுவலகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதன்படி நாளை முதல் வரும், 17ம் தேதி வரை, கோவை, நாமக்கல், மதுரை, சென்னை, திருச்சி, பழனி, சேலம், தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர் உட்பட பல்வேறு நகரங்களுக்கு, 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கிணற்றில் தவறி விழுந்தமூதாட்டி உயிருடன் மீட்பு

கொடுமுடி அருகே வெங்கமேட்டை சேர்ந்த பால்ராஜ் மனைவி சரோஜா, 62; அப்பகுதியில் உள்ள, 20 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நேற்று தவறி விழுந்து விட்டார். தகவலின்படி சென்ற கொடுமுடி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் மலைக்கொழுந்து தலைமையிலான வீரர்கள், கயிறு கட்டி போராடி மீட்டனர். சரோஜாவை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

வேலை வாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

அதன்படி வரும், 19ம் தேதி காலை, 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்க உள்ளது. வேலைநாடுனர்கள் பங்கேற்று பயன் பெறலாம். வேலையளிப்போர், வேலைநாடுனர் இலவசமாக பங்கேற்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற அரசின் வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 0424 2275860 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறைஈரோட்டில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல், 17ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது. வரும், 18 அன்று வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடக்கும்.

பொங்கல் போனஸ் வழங்கல்கணக்கம்பாளையம் மற்றும் கொண்டையம்பாளையம் பகுதியில், நெசவாளர் சங்க உறுப்பினர் மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, போனஸ் வழங்கும் விழா நேற்று நடந்தது.

கொண்டையம்பாளையம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த, 110 உறுப்பினர்களுக்கு, 9.18 லட்சம் ரூபாய் போனஸ்; கணக்கம்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தில், 230 உறுப்பினர்களுக்கு, 3.35 லட்சம் ரூபாய் போனஸை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பஞ்., தலைவர்கள் மரகதம் பாலு, வெங்கடேஸ்வரன், கவுன்சிலர் கஸ்துாரி திருமுருகன், நெசவாளர் சங்கம் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மின்சாரம் தாக்கி மாணவன் பலிசென்னிமலையை அடுத்த எக்கட்டாம்பாளையம் ஊராட்சி, சாணார்பாளையத்தை சேர்ந்த வடிவேல் மகன் மெய்மதீன், 16; சென்னிமலையில் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டு பக்கத்தில் இருந்த மின் கம்பத்தின் எர்த் கம்பியை தொட்டுள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் மீட்டு சென்னிமலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாணவன் இறந்து விட்டார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து

வருகின்றனர்.

ஈரோட்டில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் சண்முகநாதன், தேவராஜ், கல்பனா தலைமை வகித்தனர்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சரவணன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மூத்த நிர்வாகி முத்துராமசாமி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும், 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் நம்பியூரில், தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில், நம்பியூர் வட்டார கல்வி அலுவலகம் முன், நம்பியூர் வட்டார தலைவர் இளங்கோ தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகன் மாயம்:

தந்தை புகார்

ஈரோடு அருகே அவல்பூந்துறை, பாரதி வீதியை சேர்ந்த அருள்தாஸ் மகன் ரவிகுமார், 24; பிளஸ் 2 படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. கடந்த ஏழு ஆண்டாக ஈரோட்டில் ஒரு பட்டு சென்டரில் வேலை செய்து வருகிறார். கடந்த, 9ம் தேதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவர் மாயமானார். உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகனை கண்டுபிடித்து தருமாறு, அவரது தந்தை அருள்தாஸ், அறச்சலுார் போலீசில் புகாரளித்துள்ளார்.

பாதாள காசி விஸ்வநாதர்

ஆலய ஆண்டு விழா

அந்தியூரை அடுத்த நல்லிக்கவுண்டன்புதுாரில், பாதாள காசி விசுவநாதர் ஆலய நான்காமாண்டு விழா நேற்று நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட ஏழை, எளியோருக்கு அன்னதானம், வஸ்தர தானம், 50 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆலய நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிவனடியார்கள் இதில் கலந்து கொண்டனர். -

ஓங்காளியம்மன் கோவிலில் தீ மிதி விழா

ஆப்பக்கூடல் அருகே கரட்டுப்பாளையம் ஓம் காளியம்மன் கோவிலில், தீ மிதி விழா நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் பிரம்பு, வேப்பிலைகளை பிடித்தபடி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நடந்த பொங்கல் விழாவில், நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

ஆர்ப்பாட்டத்துக்கு முயன்ற இ.ம.க., நிர்வாகிகள் கைது

தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. பெருமழையில் இருந்து மக்களை காக்க தவறி விட்டது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க., அரசு பதவி விலக கோரியும், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில், இந்து மக்கள் கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. டவுன் போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதால், ௧0:00 மணிக்கு அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். மதியம், 1:30 மணிக்கு கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்து.

இதையறிந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க ஈரோட்டுக்கு வந்த அர்ஜூன் சம்பத் காரை, கஸ்பாபேட்டையில் வழிமறித்து கைது செய்தனர். அதேசமயம் சூரம்பட்டி நால்ரோட்டுக்கு, மதியம், 2:20 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த மாநகர மாவட்ட செயலாளர் செந்தில் குமார், மாநில செயலாளர் முருகேசன் உள்ளிட்ட, 21 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

43 செம்மறி ஆடுகளை

திருடிய இளைஞர் கைது

வெள்ளகோவில், புள்ளசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் கோகுல்குமார், 24; வெள்ளகோவில் கலை அறிவியல் கல்லுாரி விரிவுரையாளர். இவருடைய தோட்டத்தில் தாயார் ராஜாமணி விவசாயம் செய்தும், பட்டி அமைத்து ஆடுகளையும் மேய்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டியில் இருந்து, 28 ஆடுகள் திருட்டு போனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாமணி உள்ளிட்டோர், பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் கரூரில் மணல்மேடு பகுதியில் நடந்த ஆட்டுச் சந்தை சென்று பார்த்தனர். அப்போது தங்கள் பட்டியில் திருடி வந்த ஆடுகளை, சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த குபேந்திரன் என்பவர் விலைக்கு வாங்கியது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் உதவியுடன் ஆடுகளை மீட்டு வந்தனர்.

அதேசமயம் ஆடு திருடன் குறித்து, போலீசார் விசாரித்தனர். இதில் மூலனுார், எடைக்கல்படியை சே்ந்த கார்த்தி, 30, என தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில் கடந்த நவ., மாதம், ௧7ம் தேதி வெள்ளகோவில், கரட்டுப்பாளையத்தில் சாமியாத்தாள் பட்டியில், 15 செம்மறி ஆடுகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். கார்த்தியை காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

காங்கேயம், தாராபுரத்தில்

அனுமன் ஜெயந்தி விழா

அனுமன் ஜெயந்தி விழாவை ஒட்டி, காங்கேயத்தில் பழையகோட்டை சாலையில் உள்ள, ரகுவீரநாத ஆஞ்சேநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்து, பூஜை நடந்தது. ஆஞ்சேநேயர் சுவாமியை சப்பரத்தில் வைத்து அக்ரஹாரம் வீதி, ராஜாஜி வீதி, பழையகோட்டை ரோடு வழியாக கொண்டு சென்றனர். இதேபோல சிவன்மலை அனுமந்தராய சுவாமி கோவிலில், ஆஞ்சேநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

*தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற காடு ஸ்ரீஹனுமந்தராய சுவாமி கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விஷேச பூஜைகள் நடந்தன. தாராபுரம் மட்டுமன்றி, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும், திரளானோர் பங்கேற்றனர்.

பர்கூர் மலைப்பாதையில்

கவிழ்ந்த கிரானைட் லாரி

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து, திருப்பூர் மாவட்டம் குன்னத்துாருக்கு, பர்கூர்மலை வனப்பகுதி வழியாக, ஒரு டாரஸ் லாரி புறப்பட்டது.

மலை சாலையில் நெய்க்கரை பகுதியில் நேற்று காலை

வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மலைப்பாதையோர பாறையில் மோதி

கவிழ்ந்தது. இதில் டிரைவர், கிளீனர் எவ்வித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பள்ளி மாணவன் விபரீத முடிவு

வெள்ளகோவில் அருகே நடுப்பாளையத்தை சேர்ந்த தம்பதி செந்தில்-மகாலட்சுமி. இவர்களது மகன்கள் ஸ்ரீசரண், 19, நித்திஷ், 14; செந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். மகாலட்சுமி அருகில் உள்ள மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு பள்ளியில் நித்திஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் நித்திஷ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.இந்நிலையில் மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தபோது, நித்திஷ் சேலையால் துாக்கிட்ட நிலையில் தொங்கினார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. புகாரின்படி வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

577 பேருக்கு பட்டா

வழங்கிய அமைச்சர்

காங்கேயம் தாலுகா குண்டடம் ஒன்றியத்தில், கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில், 317 பேர், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில், 260 பயனாளிகள் என, ௫௭௭ பேருக்கு, இலவச வீட்டு மனை பட்டாக்களை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் காங்கேயம் தாசில்தார் மயில்சாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல.பத்மநாபன், ஒன்றிய, நகர நிர்வாகிகள், வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தியாகி குமரனுக்கு நினைவஞ்சலி

சென்னிமலையில் பிறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, உயிரை தியாகம் செய்த தியாகி கொடிகாத்த குமரனின், 92 ஆவது நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னிமலையில் உள்ள குமரன் சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அ.தி.மு.க., சார்பாக ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன்; தி.மு.க., சார்பாக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன்; சென்னிமலை தெற்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் தலைவர் சந்திரசேகர்; காங்., சார்பில் வட்டார தலைவர் ஜிசேந்திரன்; கொடிகாத்த தியாகி குமரன் பேரவை சார்பாக பேரவை தலைவர் ஐயப்பன்; கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அம்மன் பாலு தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அனைத்து கட்சி, அமைப்பினர் சார்பாக நடந்த விழாவை, குமரன் பேரவை நிர்வாகி நிர்வாகி ஐயப்பன் ஒருங்கிணைப்பு செய்தார்.






      Dinamalar
      Follow us